எவ்வளவு வெயிலானாலும் தாங்கிக் கொள்ளலாம். குடை கொண்டு வராமல் மழை காலத்தில் வெளியே புறப்பட்டு மாட்டிக் கொள்ளும் அவஸ்தை இருக்கிறதே... அது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். சரி, இத்தனைப் படுகிறோமே... குடை எடுத்துக் கொண்டு போவோம் என்றால் ஞாபகமாக போன இடத்தில் மறந்து விடுவேன். நண்பர்கள் வீடானால் திரும்பி விடும். விழாக்களில் தொலைத்த கணக்குத் தெரிய வேண்டுமானால் என் மனைவியிடம் தான் கேட்க வேண்டும்.
அடடா... அடிக்கடி விஷயத்தை விட்டு விலகுகிறேன்... இல்லே...
எங்கே விட்டேன்... ஆ, மழையில் நனைகிறதைப் பற்றி சொன்னேனா? ஒரு தடவை சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு வந்தேனா? "ஏன் ஒரு குடை எடுத்துண்டு வரக்கூடாது? இப்படித் தான் மழையிலே நனைகிறதா? காலையிலேயே மேகமூட்டமாய் இருந்துதே" என்று கண்கலங்கினாள் பிருந்தா. எனக்கு ரொம்ப சங்கடமாய் ஆகி விட்டது. என் மறதியைப் பற்றி சொன்னேன்.
மறுநாள் புத்தம் புதிய குடை ஒன்றை வாங்கி இருந்தாள்.
"அன்பு மனசில் இருந்தால் அதெப்படி மறந்து போகும்?" இந்த அடை மொழியோடுதான் கொடுத்தாள்! என்ன அன்பு இது! இதற்கு எனக்கு அருகதை உண்டா? இதற்கு என்ன ஈடு செய்யப் போகிறேன்?
இதிலே ஆச்சரியம் என்னவென்றால் குடையை எங்கு கொண்டு போனாலும் நான் மறப்பதே இல்லை. பேச்சிலே ஒரு கண்ணும், குடையிலே ஒரு கண்ணுமாகவே இருந்தேன். அன்புப் பரிசில்லையா?
"இதென்ன? வரவர தாம் தூம்னு செலவு பண்ண ஆரம்பிச்சுட்டீங்க? வீட்டிலே மூணு கொடை இருக்கிறப்போ புதுசா எதுக்கு இன்னொண்ணு? இதெல்லாம் யார் கத்துக் குடுத்தது? இதை மறந்து எங்க தொலைச்சுட்டு வரப் போறீங்களோ?" இப்படி அன்றைக்கு என் மனைவி ஆடிய ஆட்டம்!
"நாளைக்கு எங்க மேறேஜ் ஆனிவர்சரி டே. எங்க வீட்டிலே தான் உங்களுக்கு சாப்பாடு" என் பிருந்தாவின் ஆணை இது.
"உன் பர்த்டே எப்போ?" நாங்கள் தனியாக இருக்கும் போது அவளை ஒருமையிலேயே அழைப்பேன். மற்றவர்கள் முன்னிலையில்தான் மரியாதை!
"நான் பிறந்ததே வேஸ்ட்!" நான் எப்படியெல்லாமோ கேட்டும் அவள் சொல்ல மறுத்து விட்டாள்.
"சரி, குடை, செருப்பு எல்லாம் வாங்கி தந்தியே... உனக்குப் பணம் ஏது?"
"என் கணவருக்கு சில சமயங்களில் நல்ல மூடு வரும். ஒரு கச்சேரி பணம் உனக்கு... வெளியே நாலு இடத்துக்குப் போய் வரணும். 'பளிச்'சுனு ரெண்டு புடவை எடுத்துக்கோ" ண்னு தருவார்.
"அதுக்குக் கணக்குக் கொடுக்க வேண்டாம்" முந்திய நாள் நிகழ்ச்சிகள் போல் நெஞ்சில் ஓடின.
எதிரே ஜவுளிக் கடையில் கண்ணாடிக் கேஸுக்குள் இருந்த நாரீமணிகள் பளபளப்பான புடவைகளில் ஆசையூட்டினார்கள்.
'பளீரெ'ண்று ஒரு யோசனை. 'ஏன் பிருந்தா தான் வாங்கித் தர வேண்டுமா? என் கை முடங்கி விட்டதா?' 'ஸ்டாப், ஹோல் டான்' என்றபடியே நகரும் பஸ்ஸிலிருந்து குதித்தேன்.
'இவ்வளவு நேரம் நின்னிட்டிருக்கிறப்போ இன்ணா சார் செஞ்சிட்டிருந்தீங்க? பஸ்ஸுலே ஏறினா இறங்கற ஸ்டாப்பு நினைப்பு வச்சிக்கிறதில்லே! ஒடற பஸ்லேருந்து நீங்க குதிச்சு மண்டையை ஒடைச்சுக்குங்க. இருக்கறவங்க எங்க தலையை உருட்டட்டும்" இதற்கு மேல் அவன் பேச்சு கேட்காத தூரத்துக்கு பஸ் போய் விட்டது.
நிறையக் கட்டங்கள், கோடுகள் போட்ட புடவை விலை ரெண்டாயிரம் சொன்னாள். எடுத்து விட்டேன்.
நான் போய் நின்ற போது வீட்டில் பிருந்தா மட்டுமே இருந்தாள். குழந்தைகள் பள்ளிக்குச் சென்றிருக்க வேண்டும். கணவனின் சக ஊழியன் ஒருத்தன் செத்து விட்டானாம். இழவு வீட்டுக்குப் போயிருக்கிறதாக சொன்னாள்.
புடவையைக் கொடுத்தேன். " இதெல்லாம் என்ன இது?"
"ஏன், நீ கொடுத்து நான் வாங்கலாமென்றால் நான் தந்து நீ கட்டிக் கொள்ளக் கூடாதா? தப்பிதமாக எடுத்துக் கொள்வாரோ உன் அவர்...?"
மென்மையாகப் புன்னகைத்தாள்.
"எப்படி எடுத்துக் கொள்வாரோ, தெரியாது எதற்கு ரிஸ்க்? அதை நான் பார்த்துக் கொள்கிறேன். இருங்கள்"
மல்லிகை, ஜாதி என்றால் எனக்குக் கொள்ளப் பிரியம். என் முதல் இரவன்று கூட ஏகமாக வாங்கித் தூவி இருந்தேன். என் மனைவி ஒரு ஜடம். அதையெல்லாம் ரசிக்க மாட்டாள். அவளுக்குப் பிடித்தது கனகாம்பரம், டிசம்பர்.
பூவையும், புடவையையும் வாங்கிக் கொண்டு உள்ளே போன பிருந்தா வெளியே வந்ததும் நான் மயங்கினேன். பூவின் வாசனையும், அதை வைத்திருந்த பாங்கும்... இறைவனுக்கு ஏன் இந்த ஓர வஞ்சனை! எனக்குள்ளதை பறித்து எங்கேயோ நட்டு விட்டு இன்று ஏன் கண்ணில் காட்டி வதைக்கிறார்? நான் பிருந்தாவை சந்திக்காமலே இருந்திருக்கக் கூடாதா?
என் ஆண்மை தடுமாறியது. கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க இதழ்கள் துடித்தன. என் பக்கத்தில் பஞ்சணையில் சாய்த்துக் கொண்டு என் ரசனைகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என மனசு கெஞ்சியது. இந்த உலகில் இவள் என் பக்கத்தில் இருந்தால் காலம் ஓடுவதே தெரியாது. வாழ்க்கை ஆனந்தப் பூங்காவாக, இன்பபுரியாக இருக்கும்....
(கங்கை வழியும்)
|