கலியாண ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து கொண்டிருந்தன. 'கலியாணம் ஆனபிறகு அத்தானுக்கு இப்படி ஆயிருந்தா என்ன பண்ணுவோம். இல்லே, எனக்குத்தான் அப்படி ஆயிருந்தா அத்தான் வேண்டாமின்னா உங்க மனசு என்ன பாடுபடும்', இப்படி ஆயிரம் கேள்வி கேட்டு தந்தையை சம்மதிக்கச் செய்து விட்டாள் பொன்னி. செல்வத்துக்கு ஒரே பெருமை. ஆண்டாளுக்கும், சோமுவுக்கும், எல்லையற்ற மகிழ்ச்சி. திருமணம் முடிந்து எந்த ஊர் போகப் போகிறோம் என்பதே புதிராக இருந்தது. எவரிடமும் போகும் ஊர் தெரிவிக்கப்படாமல் மர்ம்மாக இருந்தது. வெகுதூரம் போய்விட வேண்டும் என்று நினைத்தாள்.
போகுமிடம் தெரிந்தால் பரமசிவத்தின் தொல்லை தொடரும் என்று ரகசியமாய் வைத்திருந்தாள் பொன்னி.
"நம்ம ஆனந்தத்தின் புருஷன் பஞ்சாயத்து போர்டு தலைவரும்மா. அந்த ஊருக்கு அவர்தான் ராசா. ஒரு பய அசைச்சுக்க முடியாது. கடுதாசி போட்டிருக்கேன். பெரியவன் பி.ஏ. பாஸ் பண்ணிட்டு ஏதோ சர்க்கார் வேலை பார்க்கறான். சின்னவள் வெவசாயம். சிங்கக்குட்டிங்க புள்ளைங்க ரெண்டு பேரும். அந்த எல்லையிலே ஒரு பய வாலாட்ட முடியாது. பாங்க் கடனுக்கு ஏற்பாடு பண்ணச் சொல்லி இருக்கேன். எல்லா உதவியும் செய்வாங்க. ஆனந்தத்துக்கு தங்கமான மனசு. உன்னை லட்சுமியைப் போல பார்த்துக்குவா". மண்டையைக் குழப்பிக் கொண்டதில் ராமையாவின் இந்த முடிவு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
O
அறுவடை முடிந்தபிறகு கலியாண முகூர்த்தம் வைத்திருந்தார்கள். பொன்னி தாமரைக் குளத்தில் கொஞ்ச நாள் இருந்தபோது பிடாரிக்கு நேர்ந்து கொண்டிருந்தாள். தடையின்றி கலியாணம் நிச்சயமானால் மாவிளக்குப் போடுவதாக. பிரார்த்தனை நிறைவேற்ற வந்திருந்தாள். ஆயிற்று. பிரார்த்தனையும் முடிந்தது. தெரிந்தவர்களிடம் பார்த்துப் பார்த்து சொல்லிக் கொண்டாள்.
தாமரைக் குளத்தில் ஆசை தீரக் குளித்து மடி நிறைய பூக்களோடு ஈரப் புடவை சரசரக்க வரும்போது அந்தப் பெண் கூடவே குளித்தவள் -- பெயர் ராணியாம்.
"நீங்கதான் பொன்னியா? பண்ணையார் கிட்டே சவடாலாப் பேசினீங்களாமே -- அம்மா உங்களைப் பார்க்கணுமின்னு ஆசைப்பட்டது... எங்க வீட்டுக்கு வாங்களேன்!" என்று தழைந்து கூப்பிட்ட போது,
"இப்படியேவா..." எனத் தயங்க,
"ரெண்டு நிமிஷம். அதிகம் காக்க வைக்க மாட்டேன். என் அதிர்ஷ்டம். ஊரைவிட்டே போறீங்க... கொஞ்சம் மருதாணியும், கனகாம்பரமும் கொடுக்கலாமின்னு ஆசை..."
அதர்குப் பிறகு மறுக்க முடியவில்லை, பொன்னியால். குறுக்கே மணல் மேடு ஏறியதும் ரொம்ப தூரம் விலகி வந்துவிட்டோமோ என்று பொன்னி தயங்க, "அதோ" என்று தோட்டத்துக்கு நடுவில் ஒரு சின்ன ஓட்டு வீட்டைக் காண்பித்தாள் ராணி.
(தொடரும்)
|