"ஆமாம், வீட்டுலே எங்கே போனேன்னு கேட்க மாட்டாங்களா?" பொன்னி தலையைத் துவட்டிக் கொண்டே கேட்டாள்.
"உங்க அம்மா வீட்டு உறவு செங்கணாம்பட்டியிலே இருக்காங்க இல்லையா... அவங்களோடு போயிட்டதா சொல்லி இருக்கேன்".
"ஈரப்புடவையோடயா?"
"நீ ஈரச்சேலையோட வந்துக்கிட்டிருந்ததாகவும், அவங்க வண்டிக்கு நேரமாச்சுன்னு மாத்துச் சேலை கொடுத்துக் கூட்டிட்டுப் போயிட்டதாகவும், பொட்டியிலே அவ சாமான், துணிமணியோட நான் அடுத்த பஸ்ஸிலே வரதா சொல்லியிருக்கேன்னும் வாய்க்கு வந்ததை சொல்லிவிட்டு ஒன் சாமானோட இங்கதான் சுத்திட்டிருக்கேன்..."
பொன்னி ஆச்சரியமாகப் பார்த்தாள்.
"நன் இங்கதான் வருவேன்னு எப்படித் தெரியும்?"
"தாமரைக்குளத்திலே காணாமப் போனவ, அந்த இடத்துலேதான் அசம்பாவிதம் நடந்து போச்சுன்னு புரிஞ்சு போச்சு. தப்புதண்டா நடந்திருந்தா தற்கொலை பண்ணிக்க இங்கதானே வரணும். ஏற்கனவே என்னைச் சுட்டிக்காட்டி மண்ணென்ணையும், தீப்பெட்டியும் துணைன்னு சொன்னவ எந்த முடிவுக்கு வருவேன்னு தெரியாதா?"
"நேத்துலேருந்து சாப்பிடாம இங்கேயாவா சுத்திக்கிடிருக்கீங்க?"
"பசியா பெரிசு! உன்னைக் கொலை பண்ணிட்டாங்களோன்னு துடிச்சிக்கிட்டிருந்தேன். கவுச்சிக்கு அலைஞ்ச வெறிநாய். சட்டியை உடைக்காமப் போச்சேன்னு சந்தோஷமா இருக்கேன். பொன்னி, இப்ப நாம நேரா பஸ் ஏறி அந்த சொந்தக்காரங்க வீட்டுக்குப் போறோம். கொஞ்ச நேரம் அங்க தங்கிட்டு சத்திரப்பட்டி போவோம். அவுங்க கலியாணத்துக்கு வந்தா 'பொன்னியை நாங்க அழைச்சிட்டு வரலியே'ன்னு ஏதாச்சும் உளறினா மாட்டிக்குவோம்.
இந்த விஷயம் நமக்குள்ளே இருக்க வேண்டிய அந்தரங்கம். உங்கம்மாகிட்ட கூட மூச்சு விடாதே! இப்ப பரிதாபப்பட்டாலும் பின்னாடி 'நீ ரொம்ப யோக்கியம்'னு பேச்சு வந்திருச்சுன்னா 'சுருக்'குனு தைக்கும்".
பொன்னி ஓடி வந்து செல்வத்தை இறுக அணைத்துக் கொண்டு அவனது பரந்த மார்பில் சாய்ந்து அழுது தீர்த்தாள்.
"அசடு, தே, என்னது... வெரசா வா... வெள்ளி புறப்படப் போகுது... கண்ணைத் துடை".
செல்வம் சொன்னபடியே ஊரெல்லாம் சுற்றிவிட்டு கண்டபடி குழப்பிவிட்டு இரண்டு நாளில் ஊர் வந்து சேர்ந்தார்கள்.
"நல்லாத்தான் சுத்தினீங்க... காப்புகட்டுமுன்னே, இப்படி அலைஞ்சா உறவு மொறை ஏசமாட்டாங்க? ஏ... பொன்னி நாளைக்கு நீ, ஆண்டாளு, மருமக எல்லாம் ஊர் போய் சேருங்க. நாங்க ஒரு வாரம் கழிச்சு வரோம்... ஏண்டீ, நாங்க எம்புட்டுக் கவலைப்பட்டு ஊரெல்லாம் தேடி... நல்லாத்தான் இருக்கு. ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போகமாட்டே? ஈரச்சேலை கூட மாத்தாம! கூத்துதான்... போ". சிவகாமி படபடவென்று பொரிந்தாள்.
செல்வத்தை நன்றியோடு பார்த்தன பொன்னியின் கண்கள். செல்வம் அவளைக் குறும்பாக பார்த்தான். அந்த மொழி அவர்களுக்கு மட்டுமே புரியும்.
பக்கத்தில் வந்த பழனி மெதுவான குரலில்,
"செல்வம், ஒரு சமாசாரம் தெரியுமா? நீ போன மறுநாள் தோட்ட வீட்டுலே சின்ன பண்ணையை பாம்பு கொத்திருச்சு. ஊமைப்பிரமன் சைகை ஒருத்தருக்கும் புரியலை. மகன் செத்ததை கேட்டதும் பெரியவர் அலறி விழுந்தவர்தான்! ஒரு கையும் காலும் வெளங்கலை... நாக்கும் இழுத்துகிச்சு. கண்ணாலே தண்ணி ஊத்தறார். ஆரு போனாலும் கையைப் புடிச்சிக்கிட்டு! ரொம்ப கண்றாவிப்பா... எதிரிக்குக் கூட இந்த நிலைமை வரப்படாது!" என்றதும்
"வினை விதைச்சவன் வினை அறுக்க பயந்தா ஆகுமா?" என்றான் செல்வம்.
"மருமகப் பிள்ளை வந்திருக்காரு. அவரு ரொம்ப பயந்துட்டாரு... படிச்சவரா... இவங்களைக் கூட்டிகிட்டு சொத்துக்களை வித்துட்டு டவுனுக்குப் போயிடப் போறாங்களாம். நம்ம கடன் பத்திரமெல்லாம் கிழிச்சுப் போட்டுடப் போறாங்களாம். கோபாலு சொன்னான்" என்றான் மூத்த அண்ணன்.
"அப்போ நீயும் இங்கேயே இருந்துடேன் செல்வம்." என்றான் இரண்டாமவன்.
"இல்லே, பொன்னிக்கு இந்த ஊர் பிடிக்கலே... நாங்க தாமிரபரணி நதித் தண்ணியைக் கொஞ்ச நாள் குடிச்சு அங்க தொழில் செய்யப் போறோம்... எங்கே போறோம்! நல்லது, கெட்டதுன்னா கூடறோம்... எப்படியோ விடுதலை கிடைச்சா சரி." முடிவாகச் சொன்னான் செல்வம்.
ooo0O0ooo
"டே, படுவா... கில்லாடிடா நீ!" மூடிய பாத்திரத்தோடு தப்பைக் கதவைத் தள்ளிக் கொண்டு வந்தாள் ஆனந்தநாயகி.
"பாத்திரத்திலே என்ன? கமகமக்குது..." மூக்கை இழுத்து வாசனை பிடித்தான் செல்வம்.
"அது உனக்கில்லே... எம் மருமக வயத்திலே இருக்கிற குட்டிப் பையனுக்கு!" திகைத்தான்.
"என்னடா திருதிருன்னு முழிக்கறே. இந்த செட்டிகுளத்து மண்ணோட மகிமைடா. காத்தடிச்சா தாழை பூத்துடும். வந்ததுலேயிருந்து முழுகலையே. நேத்து வாந்தி எடுத்தாளா... புடிச்சுக்கிட்டேன். என்னாடீன்னா... சின்ன வயசா... பயம்! 'ஓ'ன்னு அழுவறா."
அத்தை உள்ளே போய்விட்டாள். செல்வம் கல்லாய் சமைந்திருந்தான்.
(அடுத்த வாரத்துடன் முடியும்)
|