"இதென்னடீ இவ... நாலெழுத்துப் படிக்க வைச்சது தப்பாப் போச்சே... எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசறா. நாளைக்குப் போற எடத்துலே பொண்ணு வளர்த்துருக்கா பாருன்னு எம் முகரையிலே இல்லே காறித் துப்புவாங்க!" லட்சுமி எழுந்து வெற்றிலையைத் துப்பிவிட்டு வந்தாள்.
"நல்லாத் துப்புவாளே! நம்ம வாய் மட்டும் சும்மா இருக்குமா? அவ வெறும் எச்சலைத் துப்பினா நீ வெத்தலை போட்டுத் துப்பு... ஏன் அத்தை, வசதியுள்ளவங்க சடங்குங்கற பேரிலே மேளம், பந்தல், சமையல்னு நாலு தொழிலாளிங்க பிழைக்க செலவழிக்கச் செஞ்ச ஏற்பாட்டை... இல்லாதவங்க, கடன் வாங்கியாவது செய்யணுமா? ஏற்கனவே கடன் ஏறிக் கிடக்கு... அப்புறம் என்னை மாதிரியே ஆண்டாளு படிப்பும் கெடும்".
"பொன்னி! நீயே எட்டு கிளாசோட நிறுத்திட்டே... அவளுக்கேம்மா படிப்பு. படிச்சா அதுக்கு மேல மாப்புள்ளை தேடணும். ஊரு கெட்டுக் கெடக்கு. வயசுப் பொண்ணு... நேரா நேரத்துலே வரலேன்னா அது வேற கவலை!"
பொன்னியின் பேச்சை அங்கு மதிப்பாரே இல்லை.
"ஒரு பொண்ணு உட்கார்ந்தா ஒம்பது உக்காரும்பாங்க... பொன்னி வந்த நேரம் ஆண்டாளும் வயசுக்கு வந்துட்டா"
"அதான் புறப்பட்ட பயணம் தடைப்பட்டுச்சே... உங்கண்ணன் வரேன்னிருக்காரே. நீ சடங்கை முடி. ஒரேயடியாப் பார்த்துட்டே போறோம்..."
ஆண்டாளும், பொன்னியும் மௌனமாகப் பெரியவர்கள் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
O
"ஐயா கும்புடறமுங்க..."
"வா, பழனி... சின்னம்மாவுக்குக் கலியாணம் நிச்சயமாவப் போவுது... மாப்புள்ளை வீட்டுக்காரங்க சம்மதம் தெரிவிச்சு லெட்டர் போட்டிருக்காங்க... சும்மா தேனீ மாதிரி சுறுசுறுப்பா வேலை பார்க்கணும்... என்ன புரியுதா?" மடக்கு நாற்காலியில் சாய்ந்தபடி மீசையை நீவிவிட்டுக் கொண்டு கேட்டார் பண்ணையார் பரமசிவம்.
"ஆவட்டுமுங்க"
"மீனாட்சி, பழனி வந்திருக்கான் பாரு... அவன்கிட்ட என்ன சொல்லணுமோ சொல்லு..." உள்ளே பார்த்து உரக்கக் குரல் கொடுத்தார்.
இரட்டை நாடி சரீரத்தை தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்த மீனாட்சி, "பழனியா, வா... என்னாலே வரவரத் தள்ளலேப்பா. ஒம் பொஞ்சாதி, மருமகளை வரச் சொல்லு. சும்மா வீடு வீடுன்னு ஓடாம... மாவு இடிக்கணும், சாமானெல்லாம் நோம்பணும், நெல்லு அவிக்கணும்... ஏகப்பட்ட வேலை கிடக்கு... இங்கியே சாப்பிட்டுக்கலாம்", சொல்லி முடிப்பதற்குள் மூச்சிரைத்தது.
"சரிங்க"
O
"அதிகப்படி வேலை செஞ்சா கூலி எதுவும் கிடையாதா மாமா?" சாணியில் உமி, கரித்தூள் கலந்து கொண்டே கேட்டாள் பொன்னி.
"கூலி என்னம்மா கூலி... அந்தச் செந்தில் பவலாட்டும் வாக்குவாதம் பண்றே. அவசரம் ஆத்திரமுன்னா சுணங்காம பணம் கொடுக்கறாங்களே! அது எதிலே சேர்த்தி? செந்திலைப் படிக்க வைக்க, அவங்கண்ணன் ரெண்டு பேரு கலியாணம் முடிக்க, உங்கத்தை பேறுகாலம் எல்லாத்துக்கும் பணம் கொடுத்தது ஆராம்?"
"ஏம் மாமா, நீங்க ராப்பகல் பாக்காம உடம்பைச் செருப்பாத் தைச்சுப் போடறீங்க... அதுக்குக் கூலின்னு பார்த்தாக்கூட எவ்வளவோ மிஞ்சுமே..."
பொன்னி உருண்டை பிடிக்க ஆண்டாள் சுவற்றில் வறட்டி தட்டிக் கொண்டிருந்தாள்.
"சாப்பாடு போடறாங்களே"
"பெரிய்ய சாப்பாடு! நாலு மாட்டை வாங்கிக் கட்டியிருந்தீங்கன்னா அது போடும். வேலை நிறுத்தம் பண்ணாது. லாபத்துலே பங்கு கேட்காது. நேரம் காலம் பார்க்காது. பண்ணையிலே மாடும், நீங்களும் ஒண்ணுதான்... இப்படி எத்தனை குடும்பம் இருக்கீங்க?"
"நாற்பது குடும்பம் இருக்கோம்..."
"சௌகரியமாப் போச்சு. நம்ம குடும்பத்திலேயே களை எடுக்க, அறுப்பு, நாத்து நடன்னா நீங்க, அத்தை, அத்தான் மூணு, அண்ணி ரெண்டு... ஏழு பேராச்சு. இன்னம் சோமு அத்தான் படிச்சிட்டு வந்தா எட்டாச்சு. வீட்டுக்கு அஞ்சு பேருன்னாக் கூட இருநூறு பேராச்சே..."
"சே, என்னம்மா நீ... நாற்பது குடும்பத்துக்கும் சாப்பாட்டுக்கு அளக்கிறாங்களே!"
"ஆமாமா... அப்பப்போ பத்துபடி நெல்லு... சோளம்.. கம்பு, கேழ்வரகு"
ஆண்டாள் மெல்ல கிசுகிசுத்தாள், "எல்லாம் மச்சுப் போனது".
"தே, செருப்பாலடி... வாயைப் பாரு..." பழனி எழுந்து வந்தான்.
(தொடரும்)
|