அடக்கிவைத்த கோபத்தையும், பதில் சொல்ல முடியாத கையாலாகத்தனத்தையும் மகள் மேல் காட்ட வந்த பழனியை வழிமறித்தாள் பொன்னி. "ஏன் மாமா, அவளைக் கோவிக்கறீங்க? நான் கேட்கலையா? அப்ப என்னை வித்தியாசமாத்தானே நினைக்கறீங்க?" என்றபடி சாணிக் கையை கழுவினாள்.
"அப்படி அடக்கி அடக்கித்தானே எல்லாரும் வாயடைச்சுக் கிடக்கோம்! நான் சரி... ஆண்டாளு என் வயத்துலே பொறந்த பாவத்துக்கு இதுவரை போனது சரி. இனிமே அனுப்ப முடியுமா? மருமகப் பொண்ணுகளையும் அனுப்புனு கூசாமச் சொல்றாளே பாவி...!"
"அதானே அத்தே வழக்கமா நடந்துகிட்டிருக்கு. யாரோ என்னிக்கோ பட்ட கடனுக்கு நாம புணையா? சரி அப்படியே வைச்சுக்கிட்டாலும் இவ்வளவு சம்பளம், இவ்வளவு கடன், இவ்வளவு வட்டின்னு தெளிவா எழுதி வைச்சுக் காமிக்கறதில்லே?" பொன்னி ஆக்ரோஷமாகக் கேட்டாள்.
"மெதுவாப் பேசு புள்ளே! சுவத்துக்கும் காது உண்டு. பக்கத்து வூட்டுக் கோவாலுக்கு ஏற்கனவே எம்மேல கடுப்பு. போய் வத்தி வெச்சுருவான்"
"போய் சொல்லட்டும் மாமா... கலகம் பொறந்தாத்தான் நியாயம் கிடைக்கும். ஓடறவரைதான் வெரட்டுவாங்க", பொன்னி குமுறினாள்.
"செல்வம் வேணது சண்டை போடாச்சு பொன்னி! அவுங்க வூட்டிலே விருந்தாளி வராங்கன்னு ஏகப்பட்டது சமைக்கச் சொல்வாங்க. சூடா ருசியா ஒரு உருண்டை தரமாட்டாங்க... அப்புறம் ஆறி மிஞ்சி அகாலத்துலே, ராத்திரி பதினோரு மணிக்கு கொப்பரை, அடுக்கு எல்லாத்தையும் எடுத்துட்டுப் போன்னு கொடுப்பாங்க. அப்ப தூக்க மயக்கம். ஒருத்தருக்கும் வேண்டி இருக்காது. மிஞ்சி சாப்பிட்டா வாந்தி எடுக்கும். காலையிலே ஊச ஆரம்பிச்சுடும்... பேரு அள்ளிக் கொடுத்ததா? கல்லும் மண்ணுமா நொய், இடிச்ச கப்பி, புளிச்சுப் போன மாவு, சொத்தைக் கடலை இப்படிக் கழிஞ்சு கட்டியெல்லாம் வீட்டுக் கொருநாள் கிடைக்கும்". சிவகாமி பொறிந்தாள்.
"அடப்பாவமே, இந்த அக்குருமத்தைக் கேக்க நாதியில்லையா?"
"ஒருத்தருக்கும் முதுகெலும்பில்லே! அப்புறம் பண்ணையார் ஓட ஓட விரட்ட மாட்டார்! சமயத்துக்குப் பணம் கிடைக்காது. ஊரிலே அவருக்குப் பயந்துக்கிட்டு பேறுகாலம்னா மருத்துவச்சி கூட வரமாட்டா! நாமாவது செல்வத்தையும், சோமுவையும் படிக்க வைக்கிறோமின்னு பண்ணையார் கையைக் காலைப் புடிச்சுக் கேட்டோ ம். பெரிய மனசு பண்ணி ஒத்துக்கிட்டாரு. முக்கால்வாசி குடும்பத்துலே எட்டு வயசுப் புள்ளையெல்லாம் அவரு பாக்டரிலே வேலை செய்யுது. கடலைக்காய் ஒடைக்குது. புளி பிரிக்குது... கண்றாவி!"
"இதுக்குப் பேர்தான் கொத்தடிமைத்தனங்கறது! மனுசன் தன்னைத்தானே வித்துக்கறது. ஏன் மாமா... அவுங்க துணி எடுத்துத் தரதா சொன்னீங்களே... பட்டா எடுத்துத் தராங்க? சுத்த மோட்டாத் துணி... அதுவும் வருசத்துக்கு இரண்டு தடவை... இடையிலே வேணுமின்னா பல்லைக்காட்டி, பரக்க முழிச்சு 'அதுக்குள்ள எப்படிடா கிழியும்! கவனமா இருக்க வேண்டாம். நாலுநாள் போவட்டும்'ன்னு ஆயிரம் கேள்வி, சால்ஜாப்பு..."
"இதெல்லாம் உனக்கு யார் சொன்னாங்க? உங்கத்தையா, ஆண்டாளா?"
"யாரோ சொன்னாங்க... எப்படியோ தெரிஞ்சுது... நடக்கறது அப்படித்தானே?"
"பொன்னி! இளரத்தம்... துடுக்காப் பேசறே. உன் வயசைக் கடந்து வந்தவன்தான் நான். ஏழை பாழைங்களுக்கு நிரந்தரமா வேலை கிடைக்கறதில்லே. அப்படியே கிடைச்சாலும் வயத்திலே அடிக்கிறானுக. நிலத்துலேயும் வருசம் முச்சூடும் வரும்படி கெடையாது... அரைப்பட்டினியும், குறைப் பட்டினியுமாக் கிடக்கறதுக்கு இப்படி ஒரு ஏற்பாடு தேவலாம்... இல்லியா? இரு வரேன்... எங்க தாத்தா அப்படியும் ரெண்டு மாடு வாங்கி பால் வியாபாரம் பண்ணினாராம். ரெண்டும் நோய் வந்து செத்துப் போச்சு... அவங்கப்பாவுக்கு அவரு பதினோராவது புள்ளை. நான் அடிமை வேலை செய்ய மாட்டேன்னு மீசையை முறுக்கிக்கிட்டுப் போனவரு ஒரு வருசத்துலே ஒடுங்கிப் போயி வந்து சேர்ந்தாராம். இதுக்கென்ன சொல்றே? நம்ம சுழி நல்லாயிருந்தா நல்ல காலம் வரும்மா!"
"சுழியாவது, முழியாவது... முயற்சியும் உழைப்பும் இருந்தா முன்னுக்கு வரலாம், மாமா! ஒரு தரம் விழுந்த குழந்தை அப்படியே கிடந்தா அது நடக்கவே நடக்காது. குளவி கலைக்கக் கலைக்க கூடு கட்டுது... மனுசன்தான் இல்லாத வியாக்ஞானம் படிச்சுக்கிட்டு சோம்பேறியா செக்குமாடு கணக்கா குண்டு சட்டிக்குள்ளியே குதிரை ஓட்டறான்..."
"என்னம்மா பண்றது! ஒங்க தாத்தா கையிலே ஓட்டமில்லாததாலே உங்கத்தையை எனக்கிக் கட்டி வைச்சாரு... அதுவே உங்கப்பா சிவகாமியை இபாடி வெசாரிக்காம கொடுக்கப் போச்சேன்னு மாய்ஞ்சு மாய்ஞ்சு படறாரு... எங்களை உறவுன்னு சொல்லிக்க யாருக்கும் வெக்கமாத்தானிருக்கும்!" பழனி நொந்த குரலில் பேசினான.
"என்ன மாமா நீங்க... நான் ஒண்ணு சொன்னா நீங்க வேற அர்த்தம் பண்ணிக்கிட்டு... நான் என்ன சொல்ல வரேன்னா, செல்வம் அத்தானையும், சோமு அத்தானையும் வேலைக்கு டவுனுக்கு அனுப்புங்க... அவுங்க தலைமுறையாவது சுதந்திரமா சம்பாரிச்சு வாழ்க்கை நடத்தட்டும்..."
(தொடரும்)
|