மாகாணிக்கிழங்கைக் கொண்டு வைத்த சிவகாமி, "ஆண்டாளு, இன்னொரு அருவாமனை ராமாயி வூட்டிலேயிருந்து வாங்கிட்டுவா... நரம்பெடுத்துக்கிட்டே பேசலாம்... வேலைக்கு வேலையும் ஆகும்" என்றபடி தோல் சுரண்ட ஆரம்பித்தாள்.
"செல்வத்தையும் சோமுவையும் இங்கிருந்து அனுப்ப முடியாது... முடியாதும்மா... அப்படிப் போறதுன்னா கடனை அடைச்சுட்டுப் போங்கங்கறாரு பண்ணையார்..."
"ஆங், அப்படி வாங்க வழிக்கு. நாலு புள்ளை பொறந்தா நாலு புள்ளையும் அடமானமா? புள்ளையே பொறக்கலேன்னா கடனை எவன் அடைப்பான்? ஆக கடன் அடையணுமின்னா வமிசம் அழியணும். அப்படித்தானே? இப்பவாவது புரியுதா... பண்ணையாருக்கு எதிலே கண்ணுன்னு. என்னக்கி மாமா நாம ஆசைப்பட்டதை சூடா, ருசியா ஆக்கித் தின்னு, பிடிச்ச துணியை நம்ம பணத்துலேருந்து எடுத்துக் கட்டறது? உழைக்கிறது நாம... இதிலென்ன பிச்சை கேட்கிறது! தயவாம் தயவு".
ஆண்டாளு அரிவாள் மனையுடன் வர அதை வாங்கி பொன்னி கிழங்கை நறுக்கினாள்.
"இந்தக் கிழங்கை எம்புட்டுக் கஷ்டப்பட்டு சீவி, நரம்பெடுத்து, நறுக்கி கொண்டு போய் கொடுத்து, அப்பாலே காரம் அரைச்சு, அத்தை ஊறுகாய் போட்டுத் தராங்க. இதுக்குப் பட்டணத்திலே இருவத்தஞ்சு ரூவா கூலி... இப்படி ஒவ்வொண்ணுக்கும் கணக்குப் போட்டுப் பாருங்க. அப்பத் தெரியும். ஒரு நாள் விருந்துச் சமையல் சமைச்சா நூறு ரூபா... வீட்டோ ட இருந்து நேரமும் சமைச்சா இருநூறு ரூவா... வருசத்துக்கு ரெண்டு புடவை! ஆதாயமில்லாம மச்சான் ஆத்தோட போகமாட்டாரு".
"ஆண்டாளு சடங்குக்கு வந்து அம்பது ரூவா மொய் எழுதிட்டுப் போயிட்டதாலே உங்க மாமாவுக்கு உச்சி குளுந்து போச்சு. அவுங்க வூட்டுக்கு நாயா உழைக்கணும்பாரு. அவருக்குத் தலை தேய்ச்சு விட்டு, முதுகு பிடிச்சு... உம்... வெளியே தெரிஞ்சா வெக்கக்கேடு... அடியாளா உழைக்கறாரு... கலியாணம் முடியற மட்டும் வண்டி மாட்டோ ட வண்டி மாடா டேசனுக்கும், ஐயா வூட்டுக்குமா தேய்வாரு. என்னிக்கு விடியுமோ? ஏ, ஆண்டாளு, நீ நறுக்கு; எனக்கு உள்ளே வேலை இருக்கு". சிவகாமி எழுந்து போனாள்.
"நம்ம கண்ணைத் துணியிலே கட்டிகிட்டு விடியலேன்னா எப்படி? கோகிலா அம்மா சொல்லிச்சு... அவுங்களுக்கு ஆம்பிளைப் புள்ளை பொறக்கலேன்னு பண்ணையார் கோகிலா அப்பாவுக்கு இரண்டாந்தாரம் கட்டி வைச்சாராமே! எலி நனையுதேன்னு பூனை அழுததாம். குலம் தழைக்கிறதுலே பண்ணையாருக்கு அம்புட்டு அக்கறைன்னாங்க... எனக்கு அழுவறதா, சிரிக்கிறதான்னு தெரியலே! கூட்டுப் பண்ணைன்னு வெச்சுக்கிட்டாக் கூட சாப்பாடு, துணிமணி சரியாப் போச்சு... அதிகப்படி உழைப்பு, ஆனா கூலி இல்லே... போனாப் போவுதுன்னா கடனாளிங்கற பட்டம் வேறே. தைரியமா செல்வம் அத்தானையும், சோமு அத்தானையும் வேலைக்கு அனுப்புவேன்னு எதிர்த்து நில்லுங்க மாமா!"
"முடியுமாம்மா?"
"முடிஞ்சாத்தான் சுபீட்சம்", பொன்னி தொடர்வதற்குள்...
"அட, வந்துட்டாங்களே. அண்ணி அண்ணே குளிச்சிட்டு வாங்க. இலை போடறேன்" என்று சிவகாமி உள்வாசற்படியில் நின்றபடி வரவேற்றாள்.
"ஐயோ, ஊருக்குப் போகணுமின்னா ஒண்ணு ஒண்ணா வந்து சேருதே! போன எடத்திலே விடறாங்களா? பிச்சுக்கிட்டு வரவேண்டியதாப் போச்சு" அலுத்தபடி உள்ளே நுழைந்தாள் லட்சுமி.
"பின்னே? வராதவுக வந்திருக்கீங்க... விடுவாங்களா? ஏய், பொன்னி, ஆண்டாளு, நீங்களுந்தான் எல்லாரும் ஒண்ணா உக்காந்துருங்க. சோத்துக்கடை முடிஞ்சிரும்" சிவகாமியை எல்லாரும் பின் தொடர்ந்தார்கள்.
O
"அட அப்பிடியா?" பரமசிவம் கொஞ்சம் நெளிந்து கொடுத்தார்.
"டே, டேய் மெல்லடா... ஆங், அங்கதான்! ஆடு சதையைக் கவ்வுது... ஆ, அப்பா... இதம இருக்குடா! பெரமா... போறச்சே நம்ம கோபாலுக்கு அந்த திண்டுக்கல் புகையிலையிலே ஒரு பொட்டலம் கொண்டு வந்து கொடுடா... அப்புறம், அதான் அந்தப் பய பழனி, செல்வமும், சோமுவும் டவுனுக்கு வேலைக்குப் போகணுமின்னு பிடிவாதமா நிக்கிறானேடா!"
"ஆமாங்கறேன். நெதம் அந்தக் குட்டி வூட்டிலே சண்டை போடுது. அடேங்கப்பா... என்னா பேச்சுப் பேசுது. 'அந்தப் பண்ணையார் என்ன கொம்பனா ? தலையை சீவிடுவானா ?' என்ன அப்படி பார்க்கறீங்க! மெய்யாலும் அந்தப் பொண்ணு சொன்ன பேச்சுங்க. போலீசு, மந்திரி வரை போகலாங்குது".
"ஏண்டா அந்தப் பொண்ணு பழனிக்கு என்ன வேணும்?"
"பொஞ்சாதிக்கு அண்ணன் மக. மச்சினன் மகங்க"
"பேரு.."
"பொன்னிங்க!"
"வயசு...?"
"பதினாறு, பதினைஞ்சு இருக்கும்"
"என்ன படிச்சுருக்கு தெரியுமா?"
"எட்டாங்கிளாசு"
"எத்தனை நாளாச்சு இங்கே வந்து?"
"ஆறு மாசமாச்சுங்க... பழனி மக சடங்குக்கு முன்னே வந்தது... அப்பாலே ஆண்டாளு கூட இருப்பேன்னு அடம்புடிச்சி, இவங்களும் வற்புறுத்தவே விட்டுட்டுப் போயிருக்காங்க..."
"ஆக, இதைக் கிளப்பினா நிலைமை சரியாயிடுங்கறே"
"ஆமாங்க"
"பொண்ணு அழகா?"
"லட்டுங்க... கெண்டை மீனாட்டம் கண்ணு பேசுங்க... தளதள உடம்பு... வரிசை மாறாம அரிசிப் பல்லு; தக்காளியாட்டம் கன்னம்..."
"டேய், டேட்... போதுண்டா... வயசை நினைவுபடித்திக்கோ... ஆமாம்! பழனி மகன் மேல ஏதாவது..."
"ஆமாங்க.. செல்வம் மேலே கண்ணுங்க. இரண்டு பேரையும் குளத்திலே சேர்த்துப் பார்த்ததா வூட்டிலே கூட சொன்னாங்க"
"ஒண்ணும், ஒண்ணும் ரெண்டு. சரி... நீ போ. பெரமா...!" உள்ளே பார்த்து உரக்கக் குரல் கொடுத்தார்.
பிரமன் புகையிலைப் பொட்டலத்தை கோபாலுவிடம் கொடுத்துவிட்டுப் போய்விட்டான்.
(தொடரும்)
|