வீடே சோகமயமாக இருந்தது. எத்தனை பெரிய துன்பமென்றாலும் பாழும் வயிறு நேரத்துக்குப் பசிக்கிறதே! வியர்வை நாற்றம் குளிக்க வேண்டும் என்று முறையிடுகிறதே! அழுக்குத் துணியை அணிந்து கொள்ள மனசு மறுக்கிறதே! இவ்வளவு தேவைகளை வைத்துக் கொண்டு மனிதன் சும்மா உட்கார்ந்து சோகம் கொண்டாட முடியுமா? அவரவர் அலுவலைக் கவனிக்கப் போய்விட்டிருந்தனர். தந்தி வந்ததும் அடம்பிடித்து பெற்றோருடன் கிளம்பி வந்துவிட்ட பொன்னி, பதினைந்து நாட்கள் கழிந்து பெற்றோர் புறப்பட்டபோது கிளம்ப மறுத்துத் தங்கிவிட்டாள்.
இப்போது ராமையாவுக்கே மகளின் பிடிவாதம் வெறுப்பாய் இருந்தது. சிவகாமியும், பழனியும் எத்தனையோ சொல்லிப் பார்த்தனர். பொன்னியின் மனம் உடும்பாய் இருந்தது.
பண்ணையார் மனசு தங்கம் என்று அத்தையும், மாமாவும் உருகிப் போனார்கள். ஏழெட்டு மாசம் செல்வத்துக்கு சம்பளம் கொடுத்ததைச் சொல்லிச் சொல்லி மாய்ந்து போனார்கள். விபத்து நடந்தவுடன் தனியார் மருத்துவமனையில் சேர்த்து பணம் கட்டி வைத்தியம் பண்ணிய அறையைக் கொண்டாடினார்கள்.
பொன்னி ஒரே ஒரு நாள் ஆஸ்பத்திரியில் அவரை சந்திக்கும்படி ஆயிற்று. பசுத்தோல் போர்த்திய புலி, எல்லாம் வேஷம் என்று அவளுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அவள் சொன்னால் யார் நம்புவார்கள்! காமாலைக் கண் என்று கண்டிப்பார்கள். ஏரில் உழுத காளையைக் கொன்று செருப்புத்தானம் செய்கிற வள்ளலை இனம் கண்டுகொள்ள முடியாத கருத்துக் குருடர்களைத் திருத்துவது எப்படி?
இதிலே ஒழுங்காக வயல்வேலைக்குப் போன செல்வத்தை ·பாக்டரியில் சேர்க்கவைத்தது இவளால்தானே என்பது போன்ற மறைமுகக் குற்றச்சாட்டு வேறே! எப்படி இருந்தால் என்ன... ஒரு கை மணிக்கட்டோடும், ஒரு கை முழங்கையோடும் துண்டாகிவிட்டது. அவள் அத்தான் இனி ஊனமுற்றவன். இதை நினைத்து விம்மி விம்மி அழுதாள் பொன்னி.
"அட பொன்னி எப்ப வந்தே? தைரியமா சாட்டையாலே அடிக்கிற மாதிரிப் பேசற பொன்னியா அழுவறது? உன் கண்ணீரைத் துடைக்க எனக்குக் கையில்லே... உன்னைக் கட்டிப் பிடித்துக் கொஞ்சி விளையாட எனக்குக் கையில்லே... உங்கம்மா, அப்பா சொல்றபடி செந்திலைக் கட்டிக்க... பந்தானமா வாழலாம்... இந்த முடவனைக் கட்டிக்கிட்டா என்ன சொகம்? அம்மா சொல்றாப் போல அவளுக்குத் தீராது! உனக்கேன் தலைவிதி?"
செல்வத்தின் வாயைத் தன் தளிர் விரல்களால் பொத்தினாள் பொன்னி.
"இன்னொரு வாட்டி இந்த மாதிரிப் பேசினீங்க தாமரைக் குளத்திலே விழுந்துடுவேன்... அதுக்குக் கையில்லாட்டாலும் என்னைக் கட்டிக்கும். கையாலே தள்ளியிருந்தா ஒதுங்கி இருப்பேன்... நீங்க சொல்லாலே தள்ளறீங்க! பரிசம் போட வந்தவங்க முன்னாலே உங்களைத்தான் கட்டிப்பேன்னு அடம் பிடிச்சுட்டு, இப்படித் தனியா நானே கஞ்சி கொடுத்து ராப்பகலா உங்க கூடவே இருந்தவளை எவன் கட்டிக்குவான்! அப்படிக் கட்டிக்க நோங்கி இருந்தா நான் ஏன் ஊருக்குப் போகலை... என்ன கேவலமா நினைச்சுப்பிட்டீங்க...? நீங்க வேணா எனக்கு அப்படி ஆயிருந்தா வேறே, வேறே..." பொன்னி தேம்ப,
"பொன்னி, பொன்னி, தே... யாராவது பார்த்தா...! கண்ணைத் தொடச்சிட்டாதான்.... இல்லாப்போனா நான் இன்னக்கி சாப்பிடவே மாட்டேன்" என்று செல்வம் கெஞ்ச,
மழையின் இடை வெயிலைப் போல் வெண்பற்கள் பளிச்சிடச் சிரித்தாள் பொன்னி.
"தோ, பாரு... கொஞ்சக் கை வேண்டாம்... வாயிருக்கே! நீதான் கட்டிப் பிடிக்கணுமா? நானா கட்டினாப் பிடிக்காதா? உனக்குக் கைகளா நானிருக்கேன்... இன்னொருத்தனைக் கட்டிக்கறது இந்த சென்மத்திலே இல்லே! மனசாலே உங்கிட்டே தாலி கட்டிக்கிட்டேன். இன்னொருத்தனுக்கு முந்தி போடமாட்டேன். தோப்பிலே உம்மடியிலே படுத்துப் புரண்டவ இன்னொருத்தன் கூடவா...?"
"சரி, அந்தப் பேச்சு இனி இல்லை... சரியா... அம்மாடி... இன்னம் கோவம் தணியலையா?"
"அதெல்லாம் ஒண்ணுமில்லை.. நீ வாயைத் திற... இந்த ஆரஞ்சியைச் சாப்புடு. நான் கிளம்பணும்".
"அதெல்லாம் முடியாது... ஒண்ணு தந்தாதான்..."
"சே, இது ஆஸ்பத்திரி... நர்ஸம்மா வர நேரம். அததுக்கு இடம், நேரம் இல்லே?" பொன்னி மறுக்க, செல்வம் முரண்ட சுற்றும் முற்றும் பார்த்த பொன்னித் தோற்றுப் போனாள். அங்கே நடந்த காட்சியை இரண்டு கொள்ளிக் கண்கள் பார்த்துக் கொண்டிருந்தன.
(தொடரும்)
|