கணக்கிட முடியாத நான்கு
எல்லாரும் மகிழ்ச்சியாகவும், மகிழ்ச்சிக்கான காரணங்களுடனும் இருத்தல். எல்லாரும் துன்பத்திலிருந்தும், துன்பத்தின் ஊற்றுக்களிலிருந்தும் விடுபடுதல். எல்லாரும் இன்ப துன்பச் சுழலில் இருந்து மீள்தல். எல்லாரும் பற்றற்ற, குரோதங்களற்ற சமத்துவத்தை அடைதல்
புத்தரை குறித்து எனக்கு என்ன தெரியும்? சின்ன வயதில் தொலைக்காட்சி நாடகத்தில் புத்தரை பார்த்த ஞாபகம். பெரிய பெரிய பிருமாண்ட சிலைகளில் பார்த்திருக்கிறேன். ஏழாம் வகுப்பு பாட புத்தகத்தில் 'ஆசையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்' என்று தடாலடியாக சொன்னது நினைவுக்கு வருகிறது. கூடவே ஜைனர்களும் புத்தர்களோ என்று குழம்புகிறது. பரசுராமருக்கு பதிலாக புத்தரை தசாவதாரத்தில் பார்த்ததும் வந்து போனது. பெரியார்தாசன் புத்த மதத்தைத் தழுவினது ஏனோ சம்பந்தமில்லாமல் ஊசலாடியது. பெர்னார்டொ பெர்ட்டோலூசியின் 'லிட்டில் புத்தா'வின் தாமரைப் பாதங்களை தமிழ்ப் படமொன்றில் ஹீரோயினுக்கு உல்டா செய்ததையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம். இரு தலைக் கொள்ளி எறும்பாக இருந்தாலும் வாய் நிறைய சிரிக்கும் தலாய் லாமா கொடுக்கும் ஆச்சரியம், பாஸ்டன் கலை அருங்காட்சியகத்தில் இருக்கும் புத்தர் மண்டபத்தில் கிடைக்கும் போதையில்லா கிக், தியானத்தை வலியுறுத்தும் அம்சம், அஜந்தா எல்லோராவின் சிற்பங்கள், கல்கியின் பொன்னியின் செல்வனில் வரும் டாப் வில்லன் என்று அடுக்கிக் கொண்டே போகலாம்.
இந்த மாதிரி ஏதோ ஒரு சமயத்தில்தான் அவரைக் குறித்துத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்தது. கூட வேலை செய்யும் சீனாகாரர்கள் முடிந்த அளவு குழப்பினார்கள். படிக்க ஆளுக்கொரு புத்தகத்தைக் கொடுத்தனுப்பினார்கள். இந்தியாவில் புத்தர் பிறந்த கதையை ராமர், கிருஷ்ணரின் பிறப்புக்கு ஈடாக வர்ணித்திருக்கிறார்கள். அவர் நாட்டை விட்டு விட்டு, கலர் மாறாமல் காட்டுக்குப் போக ஆரம்பித்த இடங்களில் தேவதூதர்கள் பூச்சொரிந்திருக்கிறார்கள். இன்னொரு புறம் மேற்கத்திய கலாசாரத்திற்கு ஏற்றவாறு நுகர்வோரின் செல்லப் பிள்ளையாகவும் ஸென்னும், ·பெங்-ஷ¤யும் புத்தக் குறீயீடுகளால் நிரப்பப்பட்டிருக்கிறது. சீனாவில் கொரியாவில் தாய்லாந்தில் என்று ஒவ்வொரு சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப காணவைக்கிறார்கள். ரோமாபுரியில் இருந்தால் பாப்பரசராக கூட புத்தரை சித்தரித்திருக்கலாம்.
என்னுடைய இந்த முயற்சி பாராளுமன்ற தேர்தலில் வட்ட செயலாளர் செய்யும் களப்பணிக்கு ஈடானது. நாலா பக்கமும் சென்று வாக்காளர் பட்டியல் வாங்கிவருவது போல் புத்தகங்களில் இருந்து நான் புரிந்து கொண்டவற்றை எடுத்து வைக்கிறேன். குடியிருப்பவர்களை நன்கு அறிந்திருப்பதால், பெர்சனலைஸ்ட் பிரச்சாரம் போல், நண்பர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வேன். அவருடைய போதனைகளில் இருந்து நான் அறிந்து கொண்டதையும் புரிந்து கொண்டதையும் எடுத்து வைக்கப் போகிறேன். புராண வரலாற்றையும் முன் வைப்பேன்.
நான் கடவுளின் முன் கை கூப்பியும் வேண்டிக் கொள்வேன். கோபம் மிகுந்து விட்டால் நேருக்கு நேராக, நிறையவே உரிமை எடுத்துக் கொண்டு, திட்டுவதும் உண்டு. திடீரென நான்கு மாதங்களுக்கு ஸ்லோகம் எதுவும் சொல்லாமல், கோவில் பக்கம் எட்டிப் பார்க்காமல், குற்ற உணர்வு எதுவும் அடையாமல், 'வாழ்க்கையென்ன வாழ்ந்து பார்க்கலாம்' என்று இருப்பதும் உண்டு. அது போலவே, என்னுடைய சில பதிவுகள் புத்தரை வானுயர்ந்த மகா தெய்வமாகவும்; தோளில் கை போட்டு அட்வைஸ் செய்யும் நண்பனாகவும்; எங்கோ யாருக்கோ சொல்வது போன்ற மூன்றாவது மனுஷத் தனமையும் கொள்ள நேரிடும்.
பௌத்த மதம் பல தளங்களைக் கொண்டிருக்கிறது. காலை ஆறு மணிக்கு எழுந்து ஒன்பது மணியில் இருந்து இரவு எட்டு மணி வரை அலுவலகத்தில் மன்றாடி, வாரயிறுதிகளில் கேளிக்கைகளுக்கு செல்பவனையும் சென்றடைகிறது. அமெரிக்காவில் வேகமாகப் பரவுகிறது. கம்யூனிஸத்துக்கு நடுவே சீனாவில் நிலைத்து நிற்கிறது. இந்தியாவில் தள்ளாடுகிறது. தன் மதத்தில் நம்பிக்கையிழந்து நம்பிக்கையைத் தேடுபவனுக்கும் ஊன்றுகோலாக இருக்கிறது. துன்பத்தை ஒழிப்பதற்கான மாயாஜாலத்தைத் தேடுபவனையும் புன்சிரிப்போடு வரவேற்கிறது.
இந்தப் பதிவுகள் புத்தரை குறித்தும் பௌத்த மதத்தை குறித்தும் உங்கள் ஆர்வத்தையும் கூகிள் தேடல்களையும் ஊக்கப்படுத்தினால் எனக்கு மகிழ்ச்சி.
|