Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
ஹர்ஷத் மேத்தா - பாகம் : 8
- சசிகுமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

1208, நாரிமன் பாயிண்ட், ஹர்ஷத் மேத்தாவின் கனவுத் தொழிற்சாலையின் தலைமை அலுவலகம். ஆம், கனவுத் தொழிற்சாலைத் தான். கனவுகளை முதலீட்டாளர்களுக்கு
விற்பனைச் செய்யத Growmore Research & Asset Management Ltd என்ற பங்குத்தரகு நிறுவனத்தின் தலைமை அலுவலகம் அங்கு தான் செயல்பட்டுக் கொண்டிருந்தது. பங்குகளின் விலையை உயர்த்தும் வித்தைக்கு இங்கு தான் விதை விதைக்கப்பட்டது.

1991, நரசிம்மராவ் தலைமையில், நிதியமைச்சர் மன்மோகன் சிங் பொருளாதாரச் சீர்திருத்தங்களை துவங்கி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு விதை விதைத்தார். இருக்கமாக மூடிவைக்கப்பட்டிருந்த நாட்டின் பொருளாதாரக் கதவுகள் அகலத் திறக்கப்பட இந்தியப் பொருளாதாரம் வேகமாக வளரும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதினர். பங்குச்சந்தையின் மேதையான ஹர்ஷத் மேத்தாவும் இந்த பொருளாதார வளர்ச்சி பங்குச்சந்தைக்கு ஏற்றம் கொடுக்கும் என்று சரியாகக் கணித்தான். ஆனால் பங்குகள் வாங்குவதற்கு நிறையப் பணம்
தேவைப்படுமே ? அதற்கு தான் நாட்டின் வங்கித் துறையில் இருந்த ஓட்டையைப் பயன்படுத்தி பணத்தைச் சேகரித்தான். அதைத் தான் விரிவாக முந்தைய வாரங்களில் பார்த்தோம்.

சேகரிக்கப்பட்ட பணம் பங்குச்சந்தைக்கு வராமல் இருந்திருந்தால் ஒரு வேளை பல காலங்கள் இந்த ஊழல் கண்டுபிடிக்கப்படாமல் இருந்திருக்கும். ஹர்ஷத் மேத்தாவின் கனவெல்லாம் பங்குச்சந்தை தானே ? எனவே இயல்பாக இந்தப் பணத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து விட்டான். பத்திர ஊழலில் சம்பந்தப்பட்ட மற்றொரு தரகரான ஹித்தன் தலால் வெறும் பத்திரத் தரகராக இருந்ததால் பங்குச்சந்தை ஊழலில் அதிகமாக அவனது பெயர் அடிபடவில்லை. ஹர்ஷத் மேத்தா பத்திர ஊழலில் சேர்த்தப் பணத்தை பங்குச்சந்தைக்கு கொண்டு வந்து பல வருடங்களாக தணியாமல் இருந்த தன் கனவைத் தணித்துக் கொண்டான். ஆனால் அதற்காக நாடு கொடுத்த விலை மிக அதிகம்.

ஜுன் 1991, மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 1170ல் இருந்தது. அடுத்த வருடம் ஏப்ரல் மாதம் குறியீடு 4467 புள்ளிகளை எட்டியது. 11 மாதங்களில் 3297 புள்ளிகள் உயர்வு. இந்தயப் பங்குச்சந்தை வரலாற்றின் பிரம்மிக்கத்தக்க உயர்வு. நரசிம்மராவ் அரசின் பொருளாதாரச் சீர்திருத்தங்கள் தான் இந்த உயர்வுக்கு முக்கிய காரணம் என்று அனைவரும் நினைத்தனர்.

ஜனவரி 1992, மும்பை பங்குச்சந்தைக் குறியீடு 2000 புள்ளிகளைக் கடந்தது. ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார் ஆனான். ஹர்ஷத் மேத்தா எந்தப் பங்குகளில் முதலீடு செய்கிறானோ அதைப் அப்படியே பின்பற்றி முதலீடு செய்தால் போதும். நம் பணம் பெருகி விடும் என்ற எண்ணம் முதலீட்டாளர்களுக்கும், பிற தரகர்களுக்கும் ஏற்பட்டிருந்தது. ஹர்ஷத் மேத்தாவிற்கு Big-Bull என்றச் செல்லப் பெயரும் பங்குச்சந்தை வட்டாரங்களில் சூட்டப்பட்டது. பங்குச்சந்தையில் எத்தகைய சீர்திருத்தங்களை மேற்கொள்ளலாம் என்று அரசுக்கே அறிவுறுத்தும் வகையில் ஹர்ஷத் மேத்தா புகழ் பெற்றிருந்தான். அப்போதைய நிதித் துறைச் செயலாளர் கே.பி.கீதாகிருஷ்ணன் ஹர்ஷத் மேத்தாவை பங்குச்சந்தையில் எத்தகைய சீர்திருந்திருங்களை மேற்கொள்ளலாம் என்ற விவாதத்திற்கு அழைத்திருந்தார். ஹர்ஷத் மேத்தாவின் கருத்துக்கு மைய அரசே முக்கியத்துவம் கொடுத்தது என்னும் பொழுது சாதாரண முதலீட்டாளர்களை கேட்கவா வேண்டும். ஹர்ஷத் மேத்தவை அப்படியே பின்பற்றினர்.

ஊர் பெயர் தெரியாதப் பங்குகள் எல்லாம் எகிறின. கர்நாடகா பால் பியரிங் என்றொரு நிறுவனம். தற்பொழுது எந்தப் பங்குச்சந்தையிலும் இந்தப் பங்குகள் இல்லை. ஆனால் அன்றைக்கு ஹர்ஷத் மேத்தாவின் Growmore தரகு நிறுவனத்தின் Portfolio வில் இந்தப் பங்கு இருந்தது. பைசா பிரயோஜனம் இல்லாத இந்தப் பங்கு 1000 ரூபாயை எட்டியது.

பிப்ரவரி 1992, மைய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நேரம். குறியீடு 3000 ஐ எட்டியது. ஒரே மாதத்தில் பல மடங்கு உயர்வு. ஹர்ஷத் மேத்தா புகழின் உச்சியை அடைந்தான். 15,000 சதுர அடி பரப்பளவு கொண்ட மிகப் பெரிய வீட்டில் ராஜா போல வாழ்ந்தான். அவனது வீட்டில் நீச்சல் குளம் தவிர ஒரு கோல்ப் மைதானமும் இருந்தது. பலக் கார்கள். இதில் 10 கார்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. ஹர்ஷத் மேத்தவிற்கு மிகவும் பிடித்த கார் டோயோட்டா லெக்சஸ். இது போல பல டோயோட்டோ மாடல்கள் அவனிடம் இருந்தன.

பங்குச்சந்தை உயர்வதைக் கண்ட பலச் சிறு முதலீட்டாளர்கள் கடன் வாங்கி சந்தையில் முதலீடு செய்யத் தொடங்கினர். பலரின் பல வருடச் சேமிப்பு சந்தையில் முதலீடு செய்யப்பட்டது. தங்கள் ஓய்வுதியத்தையும் பலர் பங்குச்சந்தையில் முதலீடு செய்தார்கள். ஹர்ஷத் மேத்தா எந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளானோ அந்தப் பங்குகளில் தான் அவர்கள் முதலீடு செய்தனர். கர்நாடகா பால் பியரிங் (Karnataka Ball Bearing), மஸ்தா லீசிங் (Mazda Leasing) போன்ற ஊர் பெயர் தெரியாதப் பங்குகள். சிறு முதலீட்டாளர்கள் இவ்வாறு முதலீடு செய்ய வேண்டும் என்று தான் ஹர்ஷத் மேத்தாவும் எதிர்பார்த்தான். இந்தப் பங்குகள் எல்லாம் எகிறிக் கொண்டே இருந்தது.

ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திய வித்தைகளிலேயே மிக எளிமையான வித்தை பங்குச்சந்தையை உயர்த்தியது தான். பங்குச்சந்தையை உயர்த்துவது ஒன்றும் பெரிய விஷயமல்ல. நிறையப் (நிறைய....) பணம் இருந்தால் யார் வேண்டுமானாலும் உயர்த்தலாம். ஒரு சிலர் கூட்டணி அமைத்தும் உயர்த்தலாம். இதற்கு தேவை மூளை கூட இல்லை. நிறையப் பணம். அவ்வளவு தான். ஹர்ஷத் மேத்தாவும் இதைத் தான் பின்பற்றினான். அவனுக்கு கைகொடுத்தது சிறு முதலீட்டாளர்களின் அறியாமை.

ஒரு பங்கு எவ்வாறு உயருகிறது ?

Demand/Supply இந்த சின்னத் தத்துவம் தான் பங்குகளின் விலையை உயர்த்துகிறது. ஒரு பொருளுக்கு தேவை அதிகமாக இருக்கும் பொழுது அந்தப் பொருளின் விலை உயரும். தேவையில்லாதப் பொருள் அல்லது நிறையப்பேர் விற்கும் பொருள் கடுமையாகச் சரியும்.

ஹர்ஷத் மேத்தாவிற்கு வங்கிகளில் இருந்த பல ஓட்டைகள் மூலமாக நிறையப் பணம் கிடைத்தது. அந்தப் பணத்தைக் கொண்டு பங்குகளை வாங்கினான். நிறையப் பணம் இருந்ததால் நிறையப் பங்குகளை அவனால் வாங்க முடிந்தது. அவன் வாங்கியப் பங்குகளின் விலை எகிறியது. இது செயற்கையாகச் செய்யப்படும் ஏற்றம். இந்த ஏற்றத்தைக் காணும் சிறு முதலீட்டாளர்கள் என்னச் செய்வார்கள் ? இவர்களுக்கு தெரிந்ததெல்லாம் ஒரே முதலீட்டு தத்துவம் தான். எந்தப் பங்கு விலை எகிறுகிறதோ அந்தப் பங்குகளை வாங்க வேண்டும். அவ்வளவு தான். ஹர்ஷத் மேத்தாவை பின்பற்றி அவன் முதலீடு செய்தப் பங்குகளையே எல்லோரும் வாங்குவார்கள். பங்குகள் மேலும் எகிறும்.

பங்குகளை வாங்குவதற்கான ஏற்ற விலையில் இருக்கிறதா என்பதைக் கண்டறியும் ஒரு முறை இருக்கிறது. அதற்கு பெயர் தான் டெக்னிகல் அனலிசிஸ். எனக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லாத முறை இது. பங்குகளின் தற்போதையச் சூழலை வைத்து பங்குகளை வாங்கலாமா/வேண்டாமா என்று முடிவுச் செய்யும் முறை. இதில் பல முறைகள் இருக்கிறது என்றாலும், சிம்பிளாக சொல்வதென்றால் ஒரு பங்கு ஏற்றத்துடன் இருக்கும் பொழுது அந்தப் பங்குகளை வாங்கலாம் என்று தான் இந்த டெக்னிகல் அனலிசிஸ் பரிந்துரைக்கும். முதலீட்டாளர்களும் அதைத் தான் செய்வார்கள். ஏற்றத்துடன் இருக்கும் பங்குகளை அப்படியே வாங்குவார்கள். பங்குகளின் அடிப்படையை ஆராயும் முறையை சிறு முதலீட்டாளர்கள் கண்டு கொள்வதே இல்லை. அது தான் ஹர்ஷத் மேத்தா போன்ற பேராசைத் தரகர்களுக்கு வசதியாகப் போய்விடுகிறது.

சிறு முதலீட்டாளர்கள் உயரும் பங்குகளை நோக்கி படையெடுத்தவுடன் விலை மேலும் எகிறும். தான் எதிர்பார்த்தது போல பங்குகள் விலை எகிறியவுடன், தன்னுடையப் பங்குகளை ஹர்ஷத் மேத்தா உடனே விற்பான். மொத்தமாக நிறையப் பங்குகள் விற்கப்படும் பொழுது பங்குகளின் விலைச் சரியும். ஹர்ஷத் மேத்தாவிற்கு மட்டும் நிறையப் பணம் கிடைக்கும். பாவம் அப்பாவி சிறு முதலீட்டாளர்கள். அவர்களின் சேமிப்பெல்லாம் கரைந்து போய்விடும்.

இவ்வளவு தான் ஹர்ஷத் மேத்தா பயன்படுத்திய டெக்னிக். இதை யாராலும் கண்டுபிடிக்க முடியாமல் போனது தான் அன்றைக்கு இந்தியப் பங்குச்சந்தையின் லட்சணம்.

மார்ச் 1992, ஹர்ஷத் மேத்தாவின் வித்தையால் குறியீடு 4000 புள்ளிகளை எட்டியது. ஹர்ஷத் மேத்தா தான் எல்லாப் பத்திரிக்கைகளின் அட்டைப்படத்திலும் காணப்பட்டான். அவன் தான் பங்குச்சந்தையின் சூப்பர் ஸ்டார். பாலிவுட் நட்சத்திரங்களுக்கு இணையான செல்வாக்கு. கரடிகளுக்கு வேர்கடலை கொடுத்து தான் பங்குச்சந்தையை வெற்றிக் கொண்டதாக சிம்பாளிக்காக கண்பித்தான் (இந்தத் தொடரின் முதல் பாகத்தை படியுங்கள், கரடிகளுக்கு வேர்கடலை கொடுத்த காரணம் புரியும்).

ஏப்ரல் 1992, குறியீடு 4400 ஐ எட்டியது. பலப் பங்குகள் பல மடங்கு அதிக விலையில் இருந்தது. ஹர்ஷத் மேத்தாவிற்கு மிகவும் பிடித்தமானப் பங்கு சிமெண்ட் நிறுவனமான ACCன் பங்குகள். இன்றைக்கு 370 ரூபாய் இருக்கும் இந்தப் பங்குகள் ஹர்ஷத் மேத்தாவால் 10,000 ரூபாயை எட்டியது. இது தவிர ரிலயன்ஸ், TISCO போன்ற பங்குகளும் ஹர்ஷத் மேத்தாவால் எகிற வைக்கப்பட்டன.

1992, ஏப்ரல் ஹர்ஷத் மேத்தாவின் பங்குச்சந்தை ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைத்தது. சுசித்தா தலால் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில் இந்த ஊழல் கதையை அம்பலப்படுத்தினார்.

ஹர்ஷத் மேத்தா என்ற தனி மனிதன் இந்தியப் பொருளாதாரத்தின் குறியீடு என்றுச் சொல்லப்படும் மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டை தன்னந்தனியாளாக 3000 புள்ளிகளுக்கும் அதிகமாக எகிற வைத்தான் என்று நினைக்கும் பொழுது பிரமிப்பாக இருக்கிறதல்லவா ?

இந்த ஊழல் கதையை பற்றிச் சொல்லும் பொழுது 3500 கோடி பங்குச்சந்தை ஊழல் என்றே சொல்லப்படுகிறது. ஆனால் இந்த ஊழல் கதையை சுசித்தா தலால் வெளியிட்டப் பிறகு ஒரே வாரத்தில் குறியீடு சுமார் 2800 புள்ளிகள்  சரிவுற்றது. 1,00,000 கோடி ரூபாய் பெருமானமுள்ள முதலீட்டாளர்களின் சேமிப்பு கரைந்துப் போனது. பல முதலீட்டாளர்கள், வங்கி ஊழியர்கள், தரகர்களின் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. இந்தியப் பங்குச்சந்தையின் மாபெரும் உயர்வுக்கு காரணமாக ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தையின் மாபெரும் சரிவிற்கும் காரணமானான். அவன் மேல் 25க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஹர்ஷத் மேத்தா கைது செய்யப்பட்டான். அவனது பங்குகள், வங்கிக் கணக்குகள், சொத்துக்கள் முடக்கப்பட்டன.

ஆனால்...ஹர்ஷத் மேத்தாவின் கதை இத்துடன் நின்று விடவில்லை.

1208, நாரிமன் பாயிண்ட்ல் இருந்து, 1992ல் செயல்பட்டுக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவின் நிறுவனமான Growmore Research & Asset Management Ltd, 1997ல் தம்யந்தி (Damayanti Group) என்ற பெயரில் மறுபடியும் பங்குச்சந்தையில் நுழைந்தது. இம் முறை ஹர்ஷத் மேத்தாவிற்கு பட்டுக்கம்பளம் விரித்தது, இந்த ஊழல் கதையை முதன் முதலில் வெளியுலகுக்கு அறிமுகப்படுத்திய இந்தியாவின் பிரபல பத்திரிக்கையான டைம்ஸ் ஆப் இந்தியா என்பது தான் வருத்தமான விஷயம்.

இந்த ஊழல் கதையின் இன்னும் பல விஷயங்களை அடுத்து வரும் வாரங்களில் தொடர்ந்து பார்ப்போம்.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |