Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
ஹர்ஷத் மேத்தா - பாகம் : 9
- சசிகுமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

ஹர்ஷத் மேத்தா பங்குச்சந்தை சார்ந்த பல நடவடிக்கைகளில் முதல் ஆளாக
இருந்திருக்கிறான். பங்குச்சந்தையின் மூலமாக சூப்பர் ஸ்டார் அளவுக்கு உயர்ந்தவனும் ஹர்ஷத் மேத்தா தான், அதே பங்குச்சந்தையை சரிய வைத்து வில்லனாக மாறியவனும் அவன் தான். அது போல இன்றைக்கு நானும் இன்னும் பலரும் செய்து கொண்டிருக்கும் பங்குச்சந்தைப் பற்றிய இணையப் பதிவை இந்தியாவில் முதன் முறையாக செய்தவனும் ஹர்ஷத் மேத்தா தான். ஆனால் அவனுடைய எல்லா செயல்களிலும் வில்லனத்தனமே மிஞ்சி இருந்தது. தான் செய்ய நினைக்கும் எதையும் செய்யும் துணிவும் அவனிடம் இருந்தது. சந்தையை உயர்த்த செய்யும் அவனது வித்தைகளில் அவனுக்கு நிறைய நம்பிக்கைகளும் இருந்தது. 1992 ஊழலுக்கு பிறகும், தன் ஊழல் கதை உலகமெங்கும் தெரிந்தப் பிறகும் மறுபடியும் அதே வித்தையை செய்யத் துணிந்தான். இதை விட ஆச்சரியம் அவனது ஊழல் கதை தெரிந்தப் பிறகும் முதலீட்டளர்கள் அவனையே தங்கள் வழிகாட்டியாக நினைத்தார்கள்.

1992 ஊழலுக்கு பிறகு நடந்தவை நாடு அறிந்தவை தான். ஹர்ஷத் மேத்தா மேல் அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளும் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. சிறையில் அடைக்கப்பட்டான். பிறகு ஜாமினில் வெளியே வந்தான். அப்பொழுது பிரதமராக இருந்த நரசிம்மராவ் மீது ஊழல் புகார்களை சுமத்தினான். இவ்வாறு ஹர்ஷத் மேத்தாவின் கதையே கலர்புள்ளானது தான். இந்தக் கதைக்கெல்லாம் நாம் செல்ல வேண்டாம். ஹர்ஷத் மேத்தாவின் ஊழல் கதையை மட்டும் கவனிப்போம். முதல் இன்னிங்சில் அனைவரையும் அதிர வைத்த, பலரை தற்கொலை செய்ய வைத்த ஹர்ஷத் மேத்தா தனது இரண்டாவது இன்னிங்சை மிக கவனமாக திட்டமிட்டான்.

1997ல் தனக்கான ஒரு இணையத் தளத்தை ( www.harshad.com ) ஏற்படுத்தினான் அடுத்து வரும் ஆண்டுகளில் இணையம் முக்கியத்துவம் பெறும் என்று கணித்தான். இணையத்தின் மூலமாக பங்குச்சந்தையை பற்றிய கட்டுரைகளுடன் நின்று விடாமல் டிப்ஸ் கொடுக்க தொடங்கினான். ஆனால் இது நல்லப் பங்குகளுக்கான டிப்ஸ் அல்ல. தான் விலையேற்றம் செய்யப் போகும் பங்குகளுக்கான டிப்ஸ். இது முதலீட்டாளர்களை தன் வலைக்குள் கொண்டு வரும் டிப்ஸ். அவன் டிப்ஸ் கொடுத்த பங்குகள் - BPL, Videocon, Sterlite போன்றவை.

BPL பங்குகள் 137%, விடியோகான் பங்குகள் 232% ஸ்டெரிலைட் பங்குகள் 41% என மூன்றே மாதத்தில் பங்குகள் விலை எகிறின. ஹர்ஷத் மேத்தா இதை எப்படி செய்தான் ?  நாரிமன் பாய்ண்டில் இருந்த Growmore Research & Asset Management Ltd நிறுவனம் தம்யந்தி என்ற பெயரில் மாற்றம் செய்யப்பட்டது. ஹர்ஷத் மேத்தா இந்த நிறுவனத்தில் தனக்கு கொஞ்சமும் சம்பந்தம் இல்லை என்பது போன்ற தோற்றத்துடன் தன் மைத்துனர்களிடம் நிறுவனத்தை ஒப்படைத்து விட்டு பங்குச்சந்தையை பற்றி பத்திரிக்கைகளிலும் இணையத்தளங்களிலும் பத்திகள் எழுத தொடங்கினான். அவனுக்கு பட்டுக்கம்பளம் விரித்த பத்திரிக்கைகளில் டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை குழுமமும் ஒன்று. அந்த பத்திரிக்கை தான் இந்த ஊழல் கதையை சுசித்தா தலால் மூலம் வெளியுலகிற்கு கொண்டு வந்தது என்று நினைக்கும் பொழுது இந்த சுழற்சி வியப்பளிக்கிறது. ஆனால் தங்கள் பத்திரிக்கையின் விற்பனையை பெருக்க ஹர்ஷத் மேத்தா தான் சரியான ஆள் என்ற நோக்கிலேயே அவர்கள் இந்த முடிவை எடுத்தனர் என்று நினைக்கும் பொழுது வியப்பு ஏற்படாது. இந்த உலகின் யதார்த்த நிலை தான் நம் கண் முன்னால் விரியும்.

ஹர்ஷத் மேத்தாவின் இரண்டாவது இன்னிங்சில் BPL, விடியோகான், ஸ்டெரிலைட் போன்ற நிறுவனங்கள், மும்பை பங்குச்சந்தையின் சில அதிகாரிகள், தம்யந்தி நிறுவனம் என பலர் கூட்டணி அமைத்துக் கொண்டனர். இதில் குறிப்பிடத்தக்கவர் மும்பை பங்குச்சந்தையின் இயக்குனர்களில் ஒருவரான ராஜேந்திர பாந்தியா. மும்பை பங்குச்சந்தையின் இயக்குனராக இருக்கும் இவருடைய பினாமி பங்குத் தரகு நிறுவனத்துடன் ஹர்ஷத் மேத்தா கூட்டணி அமைத்துக் கொண்டான். இது சாதாரண கூட்டணி அல்ல. பல தரப்பினரை உள்ளடக்கிக் கொண்ட பிரமாண்டக் கூட்டணி. சுமார் 30க்கும் மேற்பட்ட தரகு நிறுவனங்களை ஒன்று சேர்த்துக் கொண்டான். அதில் 18 முக்கியமான தரகு நிறுவனங்களும் அடங்கும். இது போதாதா, தனியாளாக இருந்து பங்குச்சந்தையை உயர்த்தியவன் இப்பொழுது கூட்டணி அமைத்து சில நிறுவனங்களின் பங்குகளை உயர்த்துவது என்று முடிவு செய்தான். தன் நிறுவனப் பங்குகளை உயர்த்துமாறும் இந்த நிறுவனங்கள் ஹர்ஷத் மேத்தாவிடம் கூறின.

இந்த மெகா கள்ளக் கூட்டணி தாங்கள் தேர்ந்தெடுத்துக் கொண்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவார்கள். ஹர்ஷத் மேத்தா இந்தப் பங்குகளை வாங்குமாறு முதலீட்டாளர்களுக்கு டிப்ஸ் கொடுப்பான். இவ்வாறு இந்த கூட்டணி மூன்றே மாதங்களில் இந்தப் பங்குகளின் விலையை எகிறச் செய்தன. உதாரணத்திற்கு BPLல் வர்த்தகம் செய்யப்பட்ட மொத்த பங்குகளின் எண்ணிக்கையான 55 லட்சம் பங்குகளில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமானப் பங்குகளை இந்தக் கள்ளக் கூட்டணி தன் கையில் வைத்திருந்தது. பங்குகளின் விலை எப்படி எகிறுகிறது என்று உங்களுக்கு தெரிந்திருக்கும் (தெரியாதவர்கள் முந்தைய அத்தியாயத்தை படியுங்கள்). இவர்கள் பங்குகளை வாங்கிக் கொண்டே இருக்க பங்குகளின் விலை எகிறியது. 1998ம் ஆண்டு துவக்க மாதங்களில் 100 முதல் 180 ரூபாயில் இருந்த BPL பங்குகள் அடுத்த மூன்று மாதங்களில் 445 ரூபாய்க்கு எகிறியது. அது போலவே விடியோகான் பங்குகள் 25 ரூபாயில் இருந்து 165க்கு உயர்ந்தது.

சரி..இவ்வாறு பங்குகளை உயர்த்துவதற்கு பணம் வேண்டுமே எங்கிருந்து அந்தப் பணம் கிடைத்தது ? இந்த ஊழல் மூலமாக ஏதாவாது புதிய ஓட்டையை கண்டு பிடித்துக் கொண்டானா ?

ஹர்ஷத் மேத்தாவிற்கு தங்கள் பங்குகளை உயர்த்துமாறு கூறிய நிறுவனங்களே பணம் கொடுத்தன. இது தவிர பங்கு வர்த்தகத்தில் இருந்த சில ஓட்டைகளையும் இந்த கூட்டணி பயன்படுத்திக் கொண்டது. அதில் குறிப்பிடத்தககது கப்ளி (Kapli) என்று சொல்லப்படும் ஒரு முறை. பங்குச்சந்தையில் Clearing System என்று ஒன்று இருப்பது அனைவருக்கும் தெரியும். இறுதி செட்டில்மெண்ட் இது மூலமாகவே செய்யப்படும். இந்த கப்ளி முறையைக் கொண்டு தரகர்கள் Clearing System ல் தங்களது மற்றொரு Clearing Systemமை கொண்டு வந்து விட்டார்கள். அதாவது தரகர்கள் இடையே வர்த்தகத்திற்கான பணப்பட்டுவாடாவிற்கு பதிலாக கப்ளி அல்லது Credit Notes என்று சொல்லப்படும் காசோலை போன்ற ஒன்றை கொடுத்து தங்களது கணக்கை நேர் செய்து கொள்ளும் முறை உண்டு. இது தரகர்கள் பணத்தை தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியமில்லாமல் வட்டி பிரச்சனையில்லாமல் வர்த்தகம் செய்து கொள்ளும் பிரச்சனையில்லாத வர்த்தகமாக இருந்தது. இந்த புதிய ஊழலின் பொழுது இந்த தரகர் கூட்டணி தங்களுக்கிடையே வர்த்தகங்களை செய்வார்கள். பணம் செட்டில்மெண்ட் செய்ய நேரிடும் பொழுது கப்ளி என்னும் Credit Notes கொடுத்து விடுவார்கள்.

இந்தக் கள்ளக் கூட்டணி இது தவிர பல வழிகளில் தங்கள் வர்த்தகததைச் செய்தன. ஒரு தரகர் தனது லிமிட்டை அடைந்துவிட்டால் மற்றொரு தரகர் மூலமாக வர்த்தகம் நடக்கும்.  பங்குகள் வாங்குவதற்கான பணத்தையும் தங்களுக்கிடையே பரிமாறிக் கொண்டனர். இது தவிர மற்றொரு அதிர்ச்சி தரும் உண்மையும் உண்டு. அது தான் இரவில் BSE ன் Trading System ல் இந்தப் பங்குகளில் வர்த்தகம் செய்தது போல போலியான பரிமாற்றங்களை நுழைத்து விடுவார்கள்.  BSEன் Vice President அந்தஸ்தில் இருந்த உயர் அதிகாரிகளும் இந்த ஊழலில் பங்கு வகித்ததால் அவர்களால் இதனைச் செய்ய முடிந்தது. இந்த போலியான வர்த்தகத்தை BSE கணினியில் நுழைத்ததாலும் கணிசமான அளவு பங்குகள் உயர்ந்தன.

இவ்வாறு உயர்த்தப்பட்ட இந்தப் பங்குகளில் மிக அதிகமான கப்ளிக்களும், Carry Forward முறைகளும் பயன்படுத்தப்பட்டன. இத்தகைய கப்ளி முறையும்,  Carry Forward முறையும் இப்பொழுது தடை செய்யப்பட்டுவிட்டன.

ஆனால் தனது இரண்டாவது இன்னிங்சில் ஹர்ஷத் மேத்தாவால் அதிகமான பணத்தை திரட்ட முடிய வில்லை என்பதால் பங்குக் குறியீடுகளில் உயர்வு ஏற்படவில்லை. ஹர்ஷத் மேத்தா மற்றும் கூட்டணியால் சுமார் 200% உயர்வை இந்தப் பங்குகள் பெற்றுக் கொண்டிருக்கும் பொழுது BSE குறியீடு சுமார் 11% வீழ்ச்சியையே கண்டது.

இந்த ஊழல் கதையையும்,  தடைசெய்யப்பட்ட சில முறைகள் பற்றியும் அதில் இருந்த ஓட்டைகள் குறித்தும் அடுத்த வாரம் பார்ப்போம்.
 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |