Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும் - குர்ஆன்
- நல்லடியார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

இஸ்லாத்தின் மீது கொண்ட மிகையான அச்சத்தினால் அதன் அடிப்படையான இறைவேதத்தின் வெளிப்பாட்டை ஆராய்கிறோம் என்ற போர்வையில் ஆராய்வோரும் குர்ஆனில் நல்ல கருத்துக்கள் இருக்கின்றன என்று ஒப்புக் கொள்ளும் அதேநேரம், அதன் வெளிப்பாட்டின் மீது ஐயம் கிளப்புபவர்கள் / ஐயம் கொண்டவர்களின் சந்தேகங்களை தெளிவு படுத்துவதும் அவசியம்.

quranமுஹம்மது நபியவர்கள் இறை வேதம் அருளப்படும் முன்னர் பெற்றிருந்த நற்பெயராலும், நாணயத்தாலும் குர்ஆன் அருளப்பட்ட காலங்களில் இருந்த மக்களுக்கு அதன் வெளிப்பாட்டில் சந்தேகம் சிறிதும் இருக்கவில்லை. எழுதப் படிக்க அறிந்திராத முஹம்மது நபி குர்ஆனை எழுதி இருப்பார் என்ற ஐயம் அவர்களுக்கு கிஞ்சிற்றும் இருந்திருக்க வில்லை. அன்றைய கால நம்பிக்கையின் படி, நிச்சயம் முஹம்மது ஒரு கைதேர்ந்த மந்திர ஜாலம் செய்யும் வித்தைகாரர் என்ற அளவிற்கே அவர்களின் சந்தேகம் சுழன்றது.

நியாயமாக சிந்தித்தால் குர்ஆன் கீழ்கண்ட மூன்று வழிகளில் மட்டுமே வந்திருக்க வாய்ப்புண்டு.

1) முஹம்மது நபி அல்லாத வேறொரு அராபியரால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

2) முஹம்மது நபியால் எழுதப்பட்டிருக்க வேண்டும்.

3) அல்லாஹ்வால் எழுதப்பட்டிருக்க வேண்டும்

குர்ஆனிய வசனங்களில் நிறைந்திருக்கும் இலக்கிய ஆளுமை, கருத்துச் செறிவு, கவிதை நடை இவற்றைக் கொண்டு பார்க்கும் போது மேற்கண்ட காரணங்களில் ஏதாவது ஒன்றன்றி வேறு வழியில் குர்ஆன் எழுதப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

அரபி மொழியின் வரலாற்றை உற்று நோக்கினால் குர்ஆன் அருளப்பட்ட காலத்தில்தான் அதன் மொழியாளுமையும் செழுமையும், வார்த்தைகளின் தெரிவும் உச்சகட்டத்தில் இருந்தன. அராபிய மொழியில் புலமைபெற்ற எவரும் குர்ஆன், அரபியர் அல்லாத ஒருவரால் எழுதப்பட்டிருக்க வாய்ப்பே இல்லை என அறுதியிட்டுக் கூறுவர்.

அரபி மொழியில் புலமை பெற்ற, தேர்ந்த கல்வியறிவுள்ள, கவித்துவ சிந்தனையுடன் இலக்கண சொல்லாளுமையாக நயமான வார்த்தைகளால் சொல்ல வரும் கருத்தை வெளிப்படுத்தும் யுக்தியறிந்த அராபிய தீபகற்பத்தை நன்கு அறிந்த, மேற்கத்திய கிழக்கத்திய நாகரிகங்களில் ஞானம் உள்ள, இன்றும் பொருந்தக்கூடிய கருத்துக்களுடன் காலத்தால் மாற்ற முடியாத சிந்தனை சக்தி படைத்த ஒருவரால்தான் குர்ஆன் வெளிப்பட்டிருக்கக் கூடும்.

கி.பி.ஆறாம் நூற்றாண்டில்தான் அராபிய இலக்கியம் அதன் உச்ச கட்டத்தில் இருந்தது. யூதர்களுக்கான இறைத்தூதுவர் மூசா நபி (Moses) காலத்தில் அச்சமூகத்தினர் சூன்ய வித்தைகளில் கைதேர்ந்தவர்களாக இருந்தார்கள். அதனால்தான் இறைவன் வழங்கிய அற்புதங்களைக் கொண்டு அம்மக்களை அல்லாஹ்வின்பால் அழைத்தார்கள்.

கிறிஸ்தவ சமூகத்திற்கு இறைத்தூதராக வந்த ஈசா நபி (Jesus) காலத்தில் அவரின் சமூக மக்கள் மருத்துவங்களில் அற்புதம் செய்து வந்தார்கள். அன்றைய மருத்துவத் துறைக்கு சவாலாக இயேசுவின் பிறப்பும் அவர் செய்த நோய் தீர்க்கும் அற்புதங்களையும் கொண்டு அவர் அல்லாஹ்வின்பால் மக்களை அழைத்தார்.

முஹம்மது நபி இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய போது அரபுலகம் இலக்கிய மோகத்தில், தங்கள் கடவுள், குலம் பற்றிய கவிதைகளை கவித்துவமான வார்த்தைகளைக் கொண்டு படைக்கப்பட்ட கவிதைகளால் சிறந்து விளங்கினார்கள். ஆகவேதான் குர்ஆன் அவற்றையெல்லாம் விஞ்சும் இலக்கிய நயத்துடன் அருளப்பட்டது.

குர்ஆன் ஏற்படுத்திய சமூக மாற்றத்தை வைத்துப் பார்க்கும் போதும், பரம்பரை பரம்பரையாக எதிரிகளாக இருந்த ஒட்டு மொத்த சமூகத்தின் எண்ண ஓட்டத்தையே புரட்டிப்போட்ட புரட்சிக்கு ஓர் இலக்கிய நயமிக்க வேதம் காரணமாக இருந்தது என்பதை வைத்துப் பார்க்கும் போதும், அரபி அல்லாத ஒருவரால் நிச்சயம் குர்ஆன் எழுதப்பட்டிருக்காது என்பதற்கு அதன் இலக்கிய நயமும், சொல்லப்பட்ட உவமானங்களுமே சாட்சியாகும்.

ஆக, அரபி நன்கு அறிந்த ஒருவரால்தான் குர்ஆன் உருவாகியிருக்க வேண்டும் என்பதைத் தவிர வேறு மாற்றுக் கருத்து இல்லை என்ற கண்ணோட்டத்தில் குர்ஆனின் வெளிப்பாட்டை அணுகுவோம்.

1) முஹம்மது நபி அல்லாத வேறொரு அராபியரால் எழுதப்பட்டதா?

குர்ஆனின் கட்டளைகள் நேரிடையானவை (Straightforward) அவை அன்றைய பாகன் அராபிய சமூகப் பழக்க வழக்கங்களை சாடியே சொல்லப்பட்டுள்ளன. அவர்கள் போற்றி பூஜித்து வந்த கடவுள்களையும் மூடப்பழக்கவழக்கங்களையும் சாடியே பெரும்பாலான வசனங்கள் இருக்கின்றன.

பரம்பரை பரம்பரையாக ஆராதித்து வணங்கி குலப்பெருமை பேசி வந்த மக்களின் பழக்க வழக்கங்களையும், மிருகங்களை விட கேவலமாக மதிக்கப்பட்ட பெண்களின் நிலையை உயர்த்தியும், தன் சமூகத்திற்கு எதிரான கருத்துக்களைச் சொல்ல வேண்டிய நிர்ப்பந்தம் அன்றைய எந்த அராபியருக்கும் இருந்திருக்கவில்லை. ஒரு சமயம் முஹம்மது அல்லாத வேறொருவர் குர்ஆனை எழுதி இருந்தால், அன்றைய மக்களால் எளிதில் ஏற்றுக் கொள்ளக் கூடிய கருத்துக்களைக் கொண்டே குர்ஆனை எழுதி இருப்பார்.

குர்ஆனின் உள்ளடக்கத்தைப் பார்த்தால் அன்றைய சமூகத்தில் மலிந்து கிடந்த பழக்க வழக்கங்களான பெண் சிசுக்கொலை, புறம் பேசுதல், இட்டுக் கட்டுதல், அவமானகரமான பட்டப்பெயரிட்டு அழைத்தல் மற்றும் வட்டி, அநீதியான வியாபாரம் (உ.ம்: ஒரு பொருளை தொட்டு விலை பேசினால் அதை கண்டிப்பாக வாங்கியே ஆக வேண்டும் மற்றும் சந்தையில் ஒரு பொருளை வீசுவார்கள் அது யார் மேல் விழுகிறதோ அதை அவர் கட்டாயம் வாங்கியே ஆக வேண்டும்.) இவற்றை எதிர்த்தே இருக்கிறது.

குர்ஆன் அருளப்பட்டக் காலத்தில்தான் அராபியர்கள் மூடப்பழக்க வழகங்களிலும், சமூக அநாகரிகங்களிலும் திளைத்திருந்தார்கள். அம்மக்களின் செயலைச் சாடி ஒருவரால் நிச்சயம் குர்ஆன் போன்ற வேதத்தை எழுதுவதை விட அவர்களைப் பாராட்டி எழுதி இருந்தால் எளிதில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக்கும். அல்லாஹ் என்ற ஓரிறையை வலியுறுத்துவதை விட அன்றைய தெய்வங்களை புகழ்ந்திருந்தால் அம்மக்களால் இலக்கியத்திற்கான இன்றைய நோபல் பரிசைவிடவும் அதிகமான பரிசுகள் கிடைத்திருக்கும்.

சமூகத்தில் புரட்சி சிந்தனையுடைய ஒரு குழுவினரால் அல்லது தனி நபரால் எழுதப்பட்டிருக்குமா என்றால் அதுவும் இல்லை என்பதே பதில். குர்ஆனைப் படித்தோமேயானால் அதில் முன் அட்டையிலோ அல்லது முன்னுரையிலோ அல்லது உவமானங்களிலோ எந்த நபரின் பெயரும் குறிப்பிடப் படவில்லை.

புரட்சி சிந்தனையுடைய எவரும் தன் பெயரை பகிரங்கமாக வெளிக்காட்டிக் கொள்ளத் தயங்குவதில்லை. இன்றைய இசங்களெல்லாம் அவர்களின் பெயராலேயே அறியப்படுகின்றன (மார்க்ஸியம், லெனினியம் போன்றவை) ஆனால் குர்ஆன் வசனங்களோ அவை அல்லாஹ்வால் அனுப்பப் பட்டவை என்றே சொல்கிறது.

குர்ஆன் மட்டுமே தன்னை மனிதர் யாரும் எழுதவில்லை என்று அறுதியிட்டுக் கூறுகிறது.

அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம். அல்குர்ஆன் 69:44

அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும் அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக. அல்குர்ஆன் 10:15

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். அல்குர்ஆன் 16:101

வரலாற்றில் இதுவரை யாரும் நான்தான் குர்ஆனை எழுதினேன் என்று இதுவரை உரிமை கோர முடியவில்லை. கோரவும் முடியாது. இதுவரை குர்ஆனின் எந்த பதிப்பிலும் எழுதியவர் என்று ஒருவரின் பெயர் இல்லை. குர்ஆனை எழுதியதாக சுட்டிக்காட்டப் பட்ட நபர் ஒருவர் வரலாற்றில் உண்டென்றால் அது முஹம்மது நபி மட்டுமே. அதுவும் சமகாலத்து முஸ்லிம் அல்லாத அரபியர்களால் / எதிரிகளால் சொல்லப்பட்ட குற்றச்சாட்டாகும். குர்ஆனை ஏற்க மறுக்கும் வரலாற்று ஆய்வாளர்கள் கூட குர்ஆன் முஹம்மது என்ற அரபியரால் எழுதப்பட்டிருக்கக் கூடும் என்றே அனுமானிக்கின்றனர்.

2) முஹம்மது நபியால் எழுதப்பட்டதா?

இந்த வாதம் அடிப்படையிலே அடிபட்டு போகிறது. ஏனெனில் முஹம்மது நபியின் வரலாற்றைப் பார்த்தோமேயானால் சாதாரண கல்வியறிவில்லாத எழுதப்படிக்க தெரிந்திராத பாமர அரபி. கல்வியறிவில்லாத ஒருவரால் நிச்சயம் கவித்துவமான, கட்டமைப்புள்ள நயமான உவமானங்களுடன் நிச்சயம் இது போன்ற இலக்கியத்தரம் வாய்ந்த நூலை எழுதி இருக்க முடியாது.

7:157 எவர்கள் எழுதப்படிக்கத் தெரியாத நபியாகிய நம் தூதரைப் பின்பற்றுகிறார்களோ

7:158 .....ஆகவே, அல்லாஹ்வின் மீதும், எழுதப்படிக்கத்தெரியா நபியாகிய அவன் தூதரின் மீதும் ஈமான் கொள்ளுங்கள், அவரும் அல்லாஹ்வின் மீதும் அவன் வசனங்களின் மீதும் ஈமான் கொள்கிறார் - அவரையே பின்பற்றுங்கள், நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்."

முஹம்மது நபி இஸ்லாத்தைச் சொல்லும் முன்னர் எந்த ஒரு கல்வியும் கற்றதில்லை. முஹம்மது நபியின் ஆசிரியராக இருந்ததாக எந்த ஒரு அரபியும் சொல்லிக் கொண்டதில்லை. முஹம்மது நபியும் கூட தனக்கு எந்த ஆசிரியரும் இல்லை என்றே சொல்கிறார். அவரின் சம காலத்து மக்களும் இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்தை எதிர்த்தவர்களின் ஆவேசத்திற்கு தங்களை விட கல்வியறிவு அறவே இல்லாத ஒருவரால் தங்கள் கொள்கைகள் ஏளனம் செய்யப்படுகின்றன என்ற ஆதங்கமே மிகைத்திருந்தது.

1400 வருடங்களுக்கு முன் இருந்த கல்வியறிவில்லாத ஒரு பாமர அரபியால் சமீபகாலத்தில் அறிவியலால் ஒப்புக் கொள்ளப்பட்ட கருவியல், வானவியல், கடலியல் கருத்துக்களை நிச்சயம் சொல்லி இருக்க முடியாது. உதா. கருவின் படிநிலை பற்றிய அறிவியல் உண்மைகள் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில்தான் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் குர்ஆன் மிகவும் துல்லியமாக, எந்த அளவுக்கென்றால் நுண் பெருக்கிகளால் மட்டுமே காண முடிந்த உண்மைகளை சர்வ சாதாரணமாகச் சொல்கிறது. (பார்க்க கருவியல், வானவியல்  கட்டுரைகள்).

குர்ஆன் அருளப்பட்ட காலம் இலக்கிய நயத்திலும் புலமையிலும் சொல்லாட்சியிலும் சிறந்து விளங்கிய அரபுக்கள் நிறைந்திருந்த காலம். குர்ஆனை விட உயரிய கவித்துமான வசனங்களை முடிந்தால் கொண்டுவாருங்கள் என்று பகிரங்க சவாலுடன் தான் குர்ஆன் அன்றைய அரபிய இலக்கியவாதிகளிடம் கொண்டு செல்லப்பட்டது.

கல்வியறிவில்லாத ஒருவர் நிச்சயம் இந்த சவாலைத் தவிர்க்கவே விரும்பி இருப்பார். அந்த சவாலும் இன்றுவரை எதிர் கொள்ளப்படாதன் மூலம் குர்ஆனின் தனித்துவமிக்க இலக்கிய ஞானம் வெற்றி கொள்ள முடியாதது என்றுதானே அர்த்தம்?

குர்ஆனைப் பொய்யாக்க முஹம்மது நபியைக் கொல்லவோ அல்லது அவர்தம் தோழர் சமூகத்தாரை போரிட்டு அழிக்கவோ செய்வதை விட அன்றைய இலக்கிய ஞானம் பெற்ற அரபிக்களுக்கு குர்ஆனைப் போல் ஒரு நூலைப் படைப்பது சாதாரண காரியமாக இருந்திருக்கும். ஆனால் எந்த புலவனும் இதற்கு முன்வரவில்லை. ஒரு கல்வியறிவில்லாத ஒருவரால் நிச்சயம் குர்ஆனைப் போன்ற நூலை படித்திருக்க முடியாது என்பது இதன் மூலம் புலனாகிறது.

மேலும் பெரும்பாலான சமூகத்தவரால் நிச்சயம் எதிர்க்கப்படும் கொள்கை எனத் தெரிந்திருந்தும். அதனால் ஒட்டுமொத்த அரபுப் பிரதேசத்தையும் பகைத்துக் கொண்டு நாடோடி வாழ்க்கை வாழ்ந்து ஒரு கொள்கையைச் சொல்ல வேண்டிய அவசியம் முஹம்மது நபிக்கு இருந்திருக்கவில்லை.

பாகன் அரபிகளின் தெய்வங்களை ஏற்றுக் கொண்டிருந்தால் அழகு மங்கைகளும், செல்வக் குவியல்களையும் கொண்டு வந்து காலடியில் போட அன்றைய செல்வந்தர்கள் தயாராகவே இருந்தனர். தன் குடும்பம், சமூகம், நண்பர்கள் இளமை முதல் பாதுகாத்து பெற்று வந்த நற்பெயர் இவற்றை இழந்து அம்மக்களுக்கு எதிரான கொள்கையைச் சொல்ல வேண்டிய அவசியமும் இருந்திருக்கவில்லை.

பிரபல குர்ஆன் ஆராய்ச்சியாளர் மற்றும் அறிஞர் அஹமத் தீதாத் அவர்கள் சொல்வதாவது: குர்ஆனில், இயேசுவின் தாயைப்பற்றி சொல்லும் போது

3:42 (நபியே! மர்யமிடத்தில்) மலக்குகள். மர்யமே! நிச்சயமாக அல்லாஹ் உம்மைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். உம்மைத் தூய்மையாகவும் ஆக்கியிருக்கிறான். இன்னும் உலகத்திலுள்ள பெண்கள் யாவரையும் விட (மேன்மையாக) உம்மைத் தேர்ந்தெடுத்து இருக்கின்றான்"

உலகத்திலுள்ள பெண்களிலெல்லாம் தூய்மையான/மேன்மையானவராக மர்யமை அல்லாஹ் தேர்ந்தெடுத்திருக்கிறான் என்று சொல்லப்படுகிறது. இது போன்ற மரியாதை கிறிஸ்தவர்களின் பைபிளில் கூட காணப்படவில்லை!

குர்ஆன் அல்லாஹ்வால் அருளப்படவில்லை என்று சொல்பவர்களிடம், "முஹம்மது ஒரு அரபியர் என்பதை ஒப்புக் கொள்கிறீர்களா என்று கேட்கப்பட்டால், குதர்க்கமும் விதண்டாவாதமும் செய்பவரைத் தவிர மற்றவர்கள் ஒப்புக் கொள்வர். இந்த அடிப்படை உண்மையை ஏற்காதவரிடம் விவாதிப்பதில் பயனில்லை. முஹம்மது நபியவர்கள் ஓர் அரபியர்தான் என்பதைக் குறைந்த பட்ச வரலாற்று அறிவு கொண்ட எவரும் மறுக்க முடியாது.

முஹம்மது நபி தன் சமூகத்தவரையே, குலத்தைவரையே விளித்து பெரும்பாலான குர்ஆனின் கட்டளைகளைச் சொல்கிறார். அவர்கள் ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்ளாவிட்டாலும் அன்னை மர்யமின் தூய்மையையும் மேன்மையையும் அன்றைய கிறிஸ்தவர்களிடமும் யூதர்களிடமும் அடிக்கோடிட்டும் ஆணித்தரமாகவும் உள்ளப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைச் சொல்கிறார்.

நன்கு கவனிக்க வேண்டும் உலகப் பெண்களில்லாம் தூய்மையானவராக / மேன்மையானவராகச் சொல்லப்படுவது தன்னை ஈன்ற தாயையோ அல்லது தன் இன்பத்திலும் துன்பத்திலும் பங்கெடுத்த மனைவி கதீஜாவையோ அல்லது அருமை மகள் பாத்திமாவையோ அல்ல. மாறாக யூதர் குலத்துப் பெண்ணான இயேசுவின் தாயாகிய அன்னை மர்யமைச் சொன்னார்.

தன் அன்னையை விட அல்லது தன் இல்லாளைவிட அல்லது தன் மகளை விட தனக்குச் சம்பந்தமே இல்லாத இன்னும் சொல்லப்போனால் எதிரியின் குலத்தைச் சேர்ந்த பெண்ணை இந்த அளவுக்கு உயர்வாகச் சொல்ல வேண்டிய தேவை முஹம்மது நபிக்கு இருந்திருக்கும் என்று நியாயமான மனம் படைத்த எவரும் சொல்லமாட்டார்.

ஜாதிய குலப்பெருமை பேசி வந்த சமூகத்தில் பிறந்த எவரும் தன் இனத்தவரை தன் எதிரியின் இனத்தவரை விட உயர்வாகச் சொல்வார் என எந்த அறிவுள்ளவராலும் ஏற்க முடியாது. அதற்கு இருந்த ஒரே காரணம் முஹம்மது நபி இறைவனிடமிருந்த தனக்கு அறிவிக்கப்பட்டவற்றை மட்டுமே சொல்ல பணிக்கப்பட்டார்.

ஆக மூன்றாவது காரணம் மட்டுமே நம்மிடம் இருக்கிறது. அதாவது அல்லாஹ்வால் அருளப்பட்டது. இதற்கான ஆதாரங்களை குர்ஆனிலிருந்தே பார்ப்போம்.

அ) சுயபிரகடனம்:

4:82 அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்.

ஆ) சவால்

2:23 இன்னும், (முஹம்மது (ஸல்) என்ற) நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகம் உடையோராக இருப்பீர்களானால், (அந்த சந்தேகத்தில்) உண்மை உடையோராகவும் இருப்பீர்களானால் அல்லாஹ்வைத்தவிர உங்கள் உதவியாளர்களை (யெல்லாம் ஒன்றாக) அழைத்து (வைத்து)க்கொண்டு இது போன்ற ஓர் அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.

2:24 (அப்படி) நீங்கள் செய்யாவிட்டால்-அப்படி செய்ய உங்களால் திண்ணமாக முடியாது- மனிதர்களையும் கற்களையும் எரிபொருளாகக் கொண்ட நரக நெருப்பை அஞ்சிக் கொள்ளுங்கள்.

10:38 இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: "நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்,அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானவர்களை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!" .

11:13 அல்லது "இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்" என்று அவர்கள் கூறுகிறார்கள்? "(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

17:88 "இந்த குர்ஆனை போன்ற ஒன்றைக் கொண்டுவருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவிபுரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வரமுடியாது" என்று (நபியே) நீர் கூறும்.

நிச்சயமாக இதில் சிந்திக்கக் கூடியவர்களுக்குப் பல படிப்பினைகள் உள்ளன.

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |