Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) - குரான் வெளிப்பட்ட விதம் குறித்து சில புதிய கண்ணோட்டங்கள்
- நேச குமார்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

நவீன மேற்கத்திய அறிஞர்களும், ஏன் சில இஸ்லாமிய அறிஞர்களும் கூட குரான் வெளிப்பட்ட விதத்தைப் பற்றி ஆய்ந்து, அது அச்ச-மனப்பிறழ்வின் விளைவாக எழும் மனப்பிராந்திகளின் வெளிப்பாடு எனக்கருதுகின்றனர். இக்கட்டுரையில், இது குறித்து இடதுசாரி சிந்தனையாளரான மாக்ஸிம் ராடின்சனின் கருத்துக்கள் / பார்வைகளைக் காண்போம்.

உலகப் புகழ் பெற்ற பென்குவின் பதிப்பகத்தார் வெளியிட்டுள்ள மாக்ஸிம் ராடின்சனின் ஆய்வு நூலான "முகம்மது" வில், முகம்மது ஒரு பித்தலாட்டக்காரர் என்பதை தீர்க்கமாக அவர் மறுக்கின்றார். இந்தக் குற்றச்சாட்டு கிறிஸ்துவ மத-அரசியலாளர்களால் மட்டுமல்ல, முகம்மதுவை ஒரு முற்போக்காளராகக் காட்ட விரும்பும் இஸ்லாமிய-மதவாத சார்பு இடதுசாரி அறிஞர்களாலும்  முன்வைக்கப் படுகிறது. சமூக சீர்திருத்தத்தை, மதநம்பிக்கைகளில் ஆழ்ந்திருந்த ஒரு பிற்போக்கான சமுதாயத்தாரிடையே வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லவே கடவுளிடம் பேசுவதாக கட்டுக்கதைகளைக் கட்டி, அதன் மூலம் வெற்றிகரமாக தமது சீர்திருத்தக் கருத்துக்களை முகம்மது பரப்பினார் என இவர்கள் கருதுகின்றனர். ஆனால், ராடின்சன் இக்கருத்தை தீர்க்கமாக மறுக்கின்றார்:

"மனோதத்துவம் மற்றும் மனவியல் சம்பந்தமான நவீன முன்னேற்றங்கள், முகம்மது அவர்களின் வெளிப்பாடுகளை பித்தலாட்டம் என்று எளிமையாக மறுக்க வழி செய்கின்றன. ஆனால், இது போன்ற சில பித்தலாட்டங்கள் இருந்தாலும், முகம்மது விஷயத்தில் இது அதீதமான ஒரு முடிவு என்றே சொல்லமுடியும். ஏனென்றால் இது போன்ற மோடிமஸ்தான் வேலைகள் மிகக்குறைவாகவே நடைபெறுகின்றன. ஆனால், இப்போது பொதுவாக ஒப்புக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம் என்னவென்றால், பலர் இது போன்ற மனப்பிரமைகள் / கற்பனைக்குரல்கள் தமக்கு நிஜமாகவே கேட்பதாக/பார்ப்பதாக எண்ணக் கூடும். ஆனால் இது போன்ற தீவிரத்தன்மை கொண்ட நம்பிக்கைகள் ஒருவருக்கு இருப்பதால், இதெல்லாம் உண்மையென்றாகா".

அப்படியென்றால், எங்கிருந்து வெளிப்பட்டன இந்த குரான் வசனங்கள்? அவர் மேலும் விளக்குகிறார்:

"ஆழ்மனது பற்றிய கண்டுபிடிப்புக்களே இது போன்ற விஷயங்களை இன்று நாம் புரிந்து கொள்ள வழிவகை செய்கின்றன (...) மனோதத்துவ பாடப்புத்தகங்களை படித்துப்பார்த்தால், இது போன்று எண்ணற்ற சம்பவங்களைக் காணலாம். தன்னையறியாமல் தன்னுள்ளே உருவாக்கிக் கொண்ட மனோபிம்பங்களில் ஆழ்ந்துவிட்ட பலர் தமக்கு நிஜமாகவே குரல்கள் கேட்கின்றன, தீர்க்க தரிசனங்கள் கிட்டுகின்றன என்றும், இவற்றை இதற்கு முன்னர் கேட்டதில்லை என்றும் உரைப்பதை இந்நூல்களில் காணலாம். ஆனால், இவற்றை மனோவியல் நிபுணர்கள் ஆழ்ந்து ஆய்ந்தபோது, எப்போதே கேட்ட, பார்த்த சம்பவங்களே இந்த கற்பனைக்குரல்களில், அக-புற தரிசனங்களில் வெளிப்படுகின்றன என்பதை அறிந்தனர். இவற்றை நமது மேல்மனம் மறந்திருக்கலாம், ஆனால் நாமறியா நமது ஆழ்மனம் இவற்றைப் பதிவு செய்து இதுபோன்ற பிரமைகளின்மூலம் மேலே கொணர்கின்றது."

ஒரு கனவினைப் போலவே இது போன்ற 'வெளிப்பாட்டுகளின்' போதும், மனமானது தான் முன்னர் கண்டு, கேட்ட சம்பவங்களின் பதிவுகளை நமது உணர்வின் மேல் மட்டங்களுக்கு கொண்டுவந்து காட்டுகிறது.

" ஆகவே, கிறிஸ்துவர்களிடமிருந்தும் யூதர்களிடமிருந்தும் கண்டு கேட்டறிந்தவற்றையே இதுபோன்ற இறைவெளிப்பாடுகளின் மூலம் முகம்மது கண்டுணர்ந்தார் என்கிற முடிவுக்கு நம்மால் வர இயலுகிறது. ஆகவே, முகம்மது முன்னர் கண்டுணர்ந்தவை, கேட்டறிந்தவை, ஆழ்மனதின் பிம்பங்கள் ஆகியவை அவரது எண்ணங்களோடும், யூகங்களோடும், தீர்மானங்களோடும், நியாயங்களோடும் ஒன்றிணைந்து, பின்னிப் பினைந்து, அங்கொன்றும் இங்கொன்றுமாய் சிதைக்கப்பட்டு தீர்க்க தரிசனங்களாகவும், இறைச் சத்தியங்களாகவும், உலக உண்மைகளாகவும் 'வஹி' மூலம் அவரே தீர்மானமாக நம்பும்படி வெளிப்பட்டன. இதனாலேயே, அவரது மனதின் அடியாழத்தில் இருந்த இவை மற்றவர்களுக்கு வெளிப்படாமல் அவருக்கு மட்டுமே வெளிப்பட்டன."

அவரது நபித்துவக்காலத்தின் இறுதி வரை (ஆரம்பக் காலங்கள் தவிர - இது பற்றி அடுத்த பாகத்தில் காணவுள்ளோம்) முகம்மது தமக்கு வெளிப்பட்ட தரிசனங்களும், குரல்களும் இறைத்தன்மை வாய்ந்தவை என்று உறுதியாக நம்பினார். சாதாரண மனிதர்கள் தாம் நேரில் காண்பவற்றை நம்புவதை விட, இந்த வஹி எனும் இறைஆவேச நிலையில் அவருக்கு வெளிப்பட்ட கருத்துக்களை மிகப்பெரிய உண்மைகள் என்று முகம்மது அவர்கள் தீவிரமாக நம்பினார்.

இக்காலத்தில் கூட மனநோய் மருத்துவமனைகளிலும், இறைக்குழுமங்களிலும் (cults) பலர் தமக்கு விண்ணிலிருந்து செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன என நம்புவதைக் காணமுடியும். இவர்களில் சிலர், இவையெல்லாம் உண்மை என பிறரையும் நம்பவைத்துவிடுவதைக் காணமுடிகிறது. கடவுளிடமிருந்து தமக்கொரு விசேஷ தொலைபேசித் தொடர்பு இருக்கிறது, அல்லது அமானுஷ்ய உலகோடு தமக்கு தொடர்பு இருக்கிறது என்று தமது அடியார்களை நம்பவைத்து அவர்களின் விசேஷ மரியாதைக்கும், அளப்பரிய அன்பிற்கும், பற்றிற்கும் உரித்தவர்களாக இவர்கள் ஆகிவிடுகின்றனர். இப்படி பிரமைகளில் சிக்குண்டு கிடக்கும் இவர்கள், பார்ப்பதற்கு பல சமயம் சாதாரணர்களாகவோ அல்லது ஒரு சில சமயங்களில் நார்மலான மனிதர்களைவிடவும் வெற்றிகரமானவர்களாகவோ கூட தென்படுவர்.

அதன்படியே, தமது தரிசனங்கள் மூலம் ஜோன் ஆ·ப் ஆர்க், தம்மைச் சுற்றியிருந்தோர் பிரிட்டிஷாரை எதிர்கொள்ளத் தகுந்த மனோசக்தியையும், நம்பிக்கையையும் ஊட்டினார். அதுபோன்றே, செங்கிஸ் கானும் இறைஆவேசங்களின் மூலம் மங்கோலிய நாடோடிகளின் தலைமைத் தெய்வமான தெங்க்ரியிடமிருந்து கிட்டிய இறைவசனங்களின் மூலம் தம்மைப் பின்பற்றும் ஒரு வலுவான கூட்டத்தை உருவாக்கி, தொடர்ந்த போர்களின் மூலம் பரந்து விரிந்து ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். இந்த சாம்ராஜ்யம் அவருக்குப்பின் ஒருசில தலைமுறைகளிலேயே சிதறுண்டு வீழ்ந்தது. ஆனால், இந்த வகையில் நீடித்த வாழ்வு கொண்ட ஒரு மிகப்பெரிய மதவாத சாம்ராஜ்யத்தை உருவாக்கிய முகம்மது   விண்குரல்களைக் கேட்டவர்களிலேயே வித்தியாசமானவராய், வெற்றிகரமானவராய் விளங்குகின்றார்.

ஆரம்பக்காலத்தில் வெளிப்பட்ட வசனங்கள் எவ்வித சந்தேகத்தையும் எழுப்பவில்லை, ஆனால் போகப் போக வெளிப்பட ஆரம்பித்த குரான் வசனங்களே முகம்மதுவின் சமகாலத்தவரிடையேயும், பிற்கால இஸ்லாமிய ஆய்வாளர்களிடையேயும் இந்த குரான் வெளிப்படும் இறை ஆவேசம் குறித்து ஐயங்கள் எழ காரணமாயின. இந்த தருணங்களில் குரான் வசனங்கள் வெளிப்பட்ட விதம், முகம்மதுக்கு மிக வசதியாய் அமைந்ததே காரணம். இதில் அனைவரும் நன்கு அறிந்த ஒரு உதாரணம், இத்தகைய இறை ஆவேச நிலையில் அல்லாஹ்விடமிருந்து முகம்மதுக்கு கிடைத்த மண உரிமை சம்பந்தமான வெளிப்பாடுகள்(revelations). இவற்றின் படி முகம்மதுவின் வளர்ப்பு மகனின் மனைவியான ஜைனப்பை  அவர் மணந்து கொள்ள வேண்டும் என்று கட்டளையிடும் அல்லாஹ்வின் வசனங்கள் வெளிப்பட்டன. அதுவரை அராபிய மக்களிடையே நிலவி வந்த வழக்க-விதிமுறைகளின் படி, இவ்வாறு வளர்ப்பு மகனின் மனைவியை, அந்த தத்தெடுத்த தந்தை மணந்து கொள்வது முறைகேடாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால், தக்க தருணத்தில் வெளிப்பட்ட இறை வசனங்களின் மூலம்(திருக்குரான் வசனங்கள்- 33:37, 33:50) முகம்மதுக்கு இந்த கட்டுப்பாடுகளிலிருந்து அல்லாஹ் விலக்களித்தார். கிறிஸ்துவ மத-அரசியலாளர்கள் இந்த சம்பவத்தை முகம்மது அவர்களின் அடக்க முடியாக் காம உணர்வுகள் தொடர்பான மிகச்சிறந்த உதாரணமாகக் காட்டுகின்றனர். ஆனால், இது இஸ்லாமிய அடிப்படைக் கட்டுமானத்தை உடைக்கும் உதாரணம் என்பதை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஏனெனில், உணர்ச்சித் தடுமாற்றங்கள் சாமான்ய மனித உணர்வு சம்பந்தப் பட்ட விஷயம் என்று பலர் புறந்தள்ளக் கூடும். ஆனால், சந்தர்ப்பத்துக்கு ஏற்றவாறு வஹி வெளிப்படுவது இஸ்லாத்தின் அடிப்படையையே ஐயுறவைக்கும் விஷயம் என்பதை இவர்கள் கவனிப்பதில்லை.
ராடின்ஸன் கூறுகிறார் :

" முதலில் நியாயமாக வெளிப்பட்ட இந்த இறை வசனங்கள், பிறகு தடுமாற ஆரம்பித்தன. ஏனெனில், பிறகு முகம்மது பல முக்கிய முடிவுகளை எடுக்கவேண்டியிருந்தது. இவையாவும் ஆட்சியதிகாரம், சமயத்துக்கு தகுந்தாற்போன்று எடுக்க வேண்டிய முடிவுகள், சட்டச் சிக்கல்கள் ஆகியவை சம்பந்தப்பட்டவை. இவை சம்பந்தப்பட்ட அல்லாஹ்வின் கட்டளைகள் முகம்மதுவுக்கு ஆவேசம் வந்து அல்லாஹ்விடம் தொடர்பு ஏற்படும் வரை காத்திருக்கா. அவர் தொடர்ந்து பலவித முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது. ஓய்வொழிச்சலில்லாமல் இவை அவரைப் பின் தொடர்ந்தன, அவரது வழிகாட்டல்கள் எதிர்நோக்கப் பட்ட நிலையில் கடவுளிடமிருந்து அவர்மூலம் வந்தடைந்த கட்டளைகள் அனைவரையும் அவற்றை ஏற்றுக்கொள்ள வைத்தன. இச்சூழலில் உண்மைகளை மெலிதாக வளைத்து சமயத்துக்கு தகுந்தாற்போல் வெளிப்பாடுகளை வெளியிடும் சஞ்சலத்திற்கு முகம்மது உள்ளானாரா? ஏனெனில் , ஒரு சில குரான் வசனங்கள் முகம்மதுவின் ஆசா பாசங்கள், கணக்கீடுகளோடு சரியாகப் பொருந்தியுள்ளன. இதை அவர் தெரிந்தே செய்தாரா, அல்லது அவரது ஆழ்மனத்தின் வெளிப்பாடுகள் இவைகளா? - இது குறித்த எந்தவித முடிவுக்கும் நம்மால் என்றும் வரமுடியாது என்றே தோன்றுகிறது"

இது போன்ற ஒருசில சந்தேகத்துக்கிடமான தருணங்களையும், வசனங்களையும் வைத்து முகம்மது குறித்த பொதுப்படையான முடிவுகளுக்கு நாம் வரமுடியாது: " சூனியத்தில் முகம்மதுவின் ஆன்மா ஆழ்ந்தெழுந்தபோது (...) ஒரு அமானுஷ்ய சக்தி தன்னை ஆட்கொள்வதையும், அதற்கு தான் அடிபணிவதையும் தனது உத்வேக நிலையிம் முகம்மது உணர்ந்தார். அப்போது அவரின் தனித்துவம் விடைபெற்றுக் கொண்டு அவ்விடத்தில் இந்த அமானுஷ்ய சக்தி இறங்கி ஆக்கிரமித்துக் கொண்டது (...) இத்தருணங்களில் அவருக்கு மேலே விவரித்த அனுபவங்கள் ஏற்பட்டன - அவருக்கு சில தரிசனங்கள் கிட்டின, குரல்களைக் கேட்டார், இவை வெளிமுகமாகவோ சில சமயங்களில் மனதிற்குள்ளாகவோ அல்லது கற்பனை வெளிகளிலோ அவருக்கு வெளிப்பட்டன. இது போன்று ஏற்படும் உணர்ச்சிவயப்பட்ட ஆவேச நிலைகளும், புலணுணர்வுகளும் பொதுவாக அனைவராலும் ஒப்புக்கொள்ளப்ப்பட்ட ஹிஸ்டீரியா, ஸ்கிசோ·ப்ரெனியா, கட்டுப்பாடற்ற குழறல்கள் போன்ற மனப்பிறழ்வுகளின் தன்மைகளுடன் ஒத்திருக்கின்றன."

முகம்மதுக்கு அடிக்கடி ஏற்பட்ட இந்த இறை ஆவேச நிலையைப் பற்றி நமக்கு எதாவது சந்தேகங்கள் இன்னமும் இருப்பின், அவற்றை தீர்த்து வைப்பது வஹி கிட்டிய ஆரம்பக் காலங்களில் இவை குறித்த முகம்மதுவின் கருத்துக்களே. ராடின்ஸன் கூறுகிறார்:

" முகம்மது எதோ திட்டம் போட்டு இவையெல்லாவற்றையும் செய்தார் என்று நாம் கருத இடமில்லை. ஏனெனில், அவருக்கு இந்த வெளிப்பாடுகள் ஏற்படுவதற்கு முன்போ அல்லது அத்தருணத்திலோ அவரது மனதில் ஏற்பட்ட ஐயங்கள், சஞ்சலங்கள், சந்தர்ப்ப சூழ்நிலைகள் குறித்த துல்லியமான தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த சம்பவங்கள் உண்மையிலேயே நிகழ்ந்தன என்றே கருத இடமிருக்கின்ற நிலையில், முகம்மதுவின் ஆன்மீக உயர்நிலையைப் பற்றி கூறவிழைந்த பாரம்பர்யங்கள் இது போன்ற சாமான்ய மனித உணர்வு சம்பந்தப்பட்ட சம்பவங்களை இடையில் இட்டுக்கட்டி சேர்த்திருக்க வாய்ப்பேயில்லை".

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
Feedback Closedஇந்த தொடருக்கான பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டது.
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |