அரங்கத்தின் ஒரு பக்கமிருந்து பலத்த கைத்தட்டல் ஒலியும், விசில் சப்தமும் கேட்டது.
முப்பாட்டன் பல்லைக் கடித்துக் கொண்டு முன் நெற்றியை உள்ளங்கையால் அழுத்த்த்திப் பிடித்தான். கடூரமான குரலில், " போச்சு. எல்லாம் போச்சு. " என்று படபடத்தான்.
கந்தசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. " என்னடா ஆச்சு ? "
" இந்த விழாவோட கவுரவம், கம்பீரம் எல்லாமே போச்சு. "
" ஏன்? "
" இலக்கியப் பத்திரிகைகளில் வெளியிட்ட அறிவிப்புகளில் இந்த ஆள் பேரைப் போடவே இல்லை. அய்யோ... கூட்டம் சேர்த்தறதுக்காக இப்படி ஒரு கேவலமான காரியத்தைப் பண்ணிட்டாங்களே..."
" யாருடா இவரு ? எங்கயோ இவரு போட்டோவைப் பார்த்த மாதிரியே இருக்கு. "
" இவன் ஒரு வெட்கங்கெட்ட வெகுஜன எழுத்தாளன். ஹ்ம். உனக்கு வெகுஜன எழுத்தும் தெரியாது, இலக்கிய எழுத்தும் தெரியாது. ஏண்டா இப்படி கேள்வி கேட்டு படுத்தறே... ஏற்கெனவே நான் டென்ஷன்ல இருக்கேன். "
கந்தசாமி அப்போதுதான் கவனித்தான். முப்பாட்டனின் முகம் அந்த ஏசி குளிரிலும் முத்து முத்தாக வியர்த்திருந்தது. மூக்கின் நுனி லேசாய் சிவந்திருந்தது. கைகளும், உடம்பும் லேசாய் நடுங்கிக் கொண்டிருந்தது.
இதே மாதிரியான அறிகுறிகளை வரும் வழியில் சற்று நேரம் முன்பு 'கதைக்கு எவ்வளவு பணம் குடுப்பாங்க? ' என்று கேட்டபோது அவனிடம் பார்த்தான். அதற்கப்புறம் கொஞ்ச நேரத்தில் சகஜமாகி விட்டான். இப்போது மறுபடியும்.
இவனுடைய இந்த மாதிரி தோற்றத்தையும், செயல்பாடுகளையும் இத்தனை வருஷத்தில் பார்த்ததே இல்லை. அவனுக்குக் கோபம் வரும் என்பதே கந்தசாமிக்குத் தெரியாது.
அவன் அறிந்த முரளி நன்றாகப் படிக்கும் பையன். அம்மா கூப்பிட்டு கடைக்குப் போய் தக்காளி, பச்சை மிளகாய் வாங்கி வரச் சொன்னால், மறுபேச்சில்லாமல் போகிறவன். இரண்டாம் ஆட்டம் போய் விட்டு வந்து ராத்திரி ஒரு மணிக்குக் கதவைத் தட்டாதவன். கிரிக்கெட் அல்லது கபடி விளையாடப் போய் அடுத்த ஊரின் வருத்தமில்லா வாலிபர் சங்கத்தினரிடம் கைகலப்பில் இறங்கி ரத்தச் சிராய்ப்புகளோடு வீடு திரும்பாதவன். அதிர்ந்து பேசாதவன். கந்தசாமியைப் பார்த்தால் முகத்தைத் திருப்பிக் கொள்கிற பக்கத்து வீட்டு உஷா கூட அவனிடம்தான் நின்று பேசுவாள். எல்லா அப்பாக்களும் அவனைக் காட்டி ' அந்தப் பையனைப் பார்த்து கத்துக்க. ' என்று தங்கள் வால் பையன்களுக்கு உதாரணம் காட்டுவார்கள்.
பூச்சி மாதிரி தெருவில் வளைய வரும் முரளி, முப்பாட்டன் என்று பெயரை வைத்துக் கொண்டு இப்படி உரத்துப் பேசுகிறானே, முணுக்கென்றால் கோபப்படுகிறானே, உடல் நடுங்குகிறானே?
இது ஏதாவது வியாதியா? பிளவாளுமை என்று இப்போது எல்லோரும் பரபரப்பாய் பேசிக் கொள்கிறார்களே, அதுவாய் இருக்குமா?
இப்படிப் பலவாறாய் யோசனை புரண்டு கொண்டிருந்தாலும், அவ்வப்போது எழும் கேள்வியை மட்டும் கேட்காமல் இருக்க முடியவில்லை.
" எழுதறவங்க எல்லாருமே எழுத்தாளர்கள் இல்லையா முரளி? என்னமோ வெகுஜனம், சிறுஜனம்ன்னு பிரிச்சு சொல்றியே? "
" ஆமாண்டா. நடிக்கிறவங்க எல்லாருமே நடிகையாயிட முடியுமா? ஷபனா ஆஸ்மிக்கும், ஷகிலாவுக்கும் வித்தியாசமில்லே? "
" ஓ.. இப்ப மேடையில் ஏறினவர் செக்ஸ் கதை எழுதறவரா? "
" ஷிட். ஐ கான்ட் டாலரேட் திஸ் நான்சென்ஸ். ஜஸ்ட் ஐ கான்ட். "
தன்னைத்தான் திட்டுகிறானோ என்று திடுக்கிட்ட கந்தசாமிக்குப் பிறகுதான் புரிந்தது. அவன் மேடையைப் பார்த்துத்தான் திட்டுகிறான். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மைக்கில் அறிவித்த விஷயம்தான் முப்பாட்டனின் பிளவாளுமையை அதிகரித்து ஆங்கிலத்தில் சரளமாய்த் திட்ட வைத்திருக்கிறது.
" நண்பர்களே, ஏராளமான பணிகளுக்கு இடையே நேரம் ஒதுக்கி இங்கே வந்திருக்கும் எழுத்துப் புயல் ஏக்நாத்குமார் அவர்களுக்கு நேரமின்மையால் நிகழ்ச்சி நிரலில் சிறுமாற்றம் செய்கிறோம். எட்டாம் புலிகேசி அவர்களின் இந்தப் புதிய நாவல் குறி்த்த தனது பாராட்டுரையை அவர் தந்து விட்டுச் செல்வார். அதன்பின் திட்டமிட்டபடி மற்ற நிகழ்ச்சிகள் தொடரும். "
கூட்டத்தில் ஒரு சிலர் முணுமுணுத்தனர். ஆனால் வந்திருந்த ஏக்நாத்குமார் ரசிகர்கள் பலமாய் கை தட்டி ஆரவாரம் செய்தார்கள். மீண்டும் விசில். முப்பாட்டனின் உடம்பில் உஷ்ணம் தாறுமாறாய் ஏறியது.
" அந்த ஹோல்சேல் எழுத்து வியாபாரி ராத்திரியில் கூட கூலிங்கிளாசைக் கழட்டறானா பாரு. " என்று பல்லைக் கடித்தான்.
" உனக்கு பைஜாமா, பிளாட்பாரம் கண்ணாடி மாதிரி அது அவருக்கு அடையாளம். சத்தமா திட்டாதே முரளி. எல்லாரும் உன்னைத் திரும்பிப் பார்க்கிறாங்க. "
" பார்க்கட்டுமே. இலக்கிய வர்க்கத்துக்கே அவமானகரமான இந்த விஷயத்தை இன்னி்க்கு நான் ரெண்டில் ஒரு கை பார்க்கத்தான் போறேன். "
'ற'-வில் எழுதிய ஒரே ஒரு கதையிலேயே இலக்கிய உலகத்தின் ஏகபோக பிரதிநிதியாய் தன்னை உருவகப்படுத்திக் கொள்கிறான் என்று தோன்றியது கந்தசாமிக்கு. இருந்தாலும் அவனைத் தடுத்து நிறுத்தும் சக்தியோ, அறிவோ தனக்கு இல்லை என்பது கந்தசாமிக்குப் புரிந்தே இருந்தது.
இதற்குள் ஏக்நாத்குமார் மைக்கின் முன்னால் வந்து நின்றிருந்தார். டெக்னீஷியன் ஓடி வந்து மைக் உயரத்தை சரிப்படுத்தி விட்டுப் போனதும், தொண்டையை செருமினார்.
" இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை? ஒரு சுத்தமான இலக்கியகர்த்தாவின் விழாவில் இவனுக்கு என்ன வேலை? அப்படின்னு உங்கள்ல பாதிப் பேர் நினைக்கறிங்க. (சிரிப்பு). ஆனா, எனக்கு இலக்கியமும் தெரியும்ங்கறது பலருக்கும் தெரியாது. நானும், எட்டாம் புலிகேசியும் நெருங்கிய நண்பர்கள்ங்கறதும், அவரோட ஒவ்வொரு கதையையும், என்னோட ஒவ்வொரு கதையையும் ஒருத்தரோடொருத்தர் விவாதிச்சிட்டுத்தான் எழுத ஆரம்பிப்போம்ங்கறதும் இது வரை நாங்க வெளியில் சொல்லாத ரகசியம். நாங்க ரெண்டு பேரும் சமகாலத்தில் எழுத ஆரம்பிச்சோம். சொல்லப் போனா எப்படி எழுதினா இலக்கிய வட்டத்தில் பேர் வாங்கலாம்ன்னு அவருக்கு சொல்லிக் கொடுத்ததே நான்தான். நான் சொல்லிக் கொடுத்ததை கப்ன்னு பிடிச்சிக்கிட்டார். மக்களுக்காக நான் எழுத, மத்தவங்களுக்காக அவர் எழுதினார். இன்னிக்கு உங்க முன்னால இமயம் மாதிரி உயர்ந்து நிக்கிறார். எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. "
அவர் பேசியதை முப்பாட்டனால் ஜீரணிக்கவே முடியவில்லை.
எழுந்து நின்றான்."ஏக்நாத்குமார், என் பேர் முப்பாட்டன். நான் ஒரு தீவிர இலக்கியவாதி. உங்க கிட்டே சில கேள்விகள் கேக்கணும். என்னோட கேள்விகளுக்கு பதில் சொல்லக் கூடிய தைரியம் உங்களுக்கு இருக்கா? எனக்கு பதில் சொல்லிட்டு, அதுக்கப்புறமா உங்க சொந்தப் பெருமையைப் பேசுங்க. "
அரங்கம் மொத்தமும் திகைத்துப் போய் - ஏக்நாத்குமாரையும், முப்பாட்டனையும் மாறி மாறிப் பார்த்தது.
(தொடரும்)
|