Tamiloviam
தொடர்கள்
இந்த வார இதழில்
தராசு
வ..வ..வம்பு
திரைவிமர்சனம்
நூல் அறிமுகம்
சிறுகதை
கவிதை
சமைத்து அசத்தலாம்
கவிதை
சிறுகதை
திரையோவியம்
அறிவிப்பு
 
  முதல் பக்கம்
சென்ற இதழ்கள்
கனலை எரித்த கற்பின் கனலி - பாகம் : 5
- செல்வன்
பாகம் : 1 | 2 | 3 | 4 | 5 (முற்றும்)
{இப்பகுதியை அச்செடுக்க}     {இத்தொடரை அச்செடுக்க}

மானை பின் தொடர்ந்து ராமன் சென்ற பின் நடந்த கதை நமக்கு தெரியும்.மாரிசன் ராமன் குரலில் "சீதா,லட்சுமணா.." என்று அலறிவிட்டு சாகிறான்.சீதை லட்சுமணனை போய் பார்க்க சொல்கிறாள்.அவன் போவதில்லை.

ராமனை யாரும் ஒன்றும் செய்ய முடியாது என்று அவனுக்கு தெரியும்.

கடவுளை யார் என்ன செய்ய முடியும்?

'எண்மை ஆர் உலகினில், இராமற்கு ஏற்றம் ஓர்
திண்மையார் உளர் எனச் செப்பற்பாலரோ?
பெண்மையால் உரைசெயப் பெறுதிரால்' என,
உண்மையான், அனையவட்கு உணரக் கூறினான்

என்று சொல்லிவிட்டு பேசாமல் இருக்கிறான் இலக்குவன்.

சீதையின் வார்த்தைகள் விஷமாக மாறுகின்றன.வால்மீகியின் வார்த்தைகளில்

"...இகசி த்வம் வினஷ்யன்டம் ராமம் லக்ஸ்மண மாத் க்றிதே
லொப்காத் து மட் க்ரிதம் நூனம் ந அனுகஷசி ராக்கவம்

கிம் கி சம்ஷயம் ஆபன்னே டஸ்மின் இக மயா பகவத்
கர்தவ்யம் இக டிஸ்தன்ட்யா யட் ப்ரதானக் த்வம் ஆகடா...."

அதாவது "ராமன் செத்த பின் என்னை அடைய திட்டமா" என்று கேட்கிறாள்.

(கம்பன் இந்த அபாண்டத்தை சீதையின் வாயிலிருந்து வரவிடுவதில்லை.கம்பராமாயனத்தில் சீதை தீக்குளிப்பேன் என்று மட்டுமே இலக்குவனை மிரட்டுகிறாள்)

'ஒரு பகல் பழகினார் உயிரை ஈவரால்;
பெருமகன் உலைவுறு பெற்றி கேட்டும், நீ
வெருவலை நின்றனை; வேறு என்? யான், இனி
எரியிடைக் கடிது வீழ்ந்து இறப்பென், ஈண்டு' எனா


பாகவத அபசாரத்தை பொறுப்பானா பகவான்?

தன்னை அபசாரம் செய்தால் கூட பொறுத்துக்கொள்வான்

தன் பக்தரை அபசாரம் செய்தால் பொறுப்பானா?

லட்சுமணனுக்கு சீதை என்ன செய்தாளோ அதுவே அவளுக்கு திரும்பி வருகிறது.

லட்சுமணன் நேர்மையை சீதை கேள்வி கேட்க பதிலுக்கு அவள் நேர்மை அவன் கேள்வி கேட்கிறான்.அபாண்டமாகத்தான் லட்சுமணன் மீது அவள் பழி போட்டாள்.அதே அபாண்டம் அவள் மீது திரும்புகிறது.

தீக்குளிப்பேன் என்று லட்சுமணனை சும்மாவாச்சும் மிரட்டினாள்.

அது உண்மையாகிறது.அதே லட்சுமணன் சிதை மூட்ட சீதை தீக்குளிக்கிறாள்.

வினை விதைத்தவர் வினையை அறுக்கிறார்.

"அவரவர் செய்த கர்மாவிற்கு ஏற்ற பலனை பாரபட்சமின்றி அவரவருக்கு நான் தருவேன்" என்று சொன்னவன் சொல்லியவண்ணமே செய்கிறான்.

மனைவி,தந்தை என்றெல்லாம் பாரபட்சம் அவன் பார்ப்பதில்லை.

சிரவனனை கொன்று அவன் தாய் தந்தையரை புத்திர சோகத்தில் தவிக்க விட்ட தசரதன் அதே போல் புத்திர சோகத்தில் இறக்கிறான்.

அம்பையின் வாழ்வை அழித்து அவளை வதைத்த பீஷ்ம பிதாமகர் அதே அம்பையின் கையால் அம்பு வாங்கி இறக்கிறார்.

அபிமன்யுவை யுத்த தருமத்துக்கு மீறிய முறையில் கொல்லப்பட காரணமாக இருந்த ஜெயத்ரதன் அதே யுத்த தருமத்தை மீறிய முறையில் கொல்லப்படுகிறான்.

பசுவின் மீது தேரை ஏற்றிக்கொன்ற கர்ணன் அதே போல் தேர்க்காலில் சாகிறான்.

எதிராளியின் பலத்தில் பாதியை பிடுங்கிக்கொண்டு அதர்ம யுத்தம் புரிந்த வாலி அதே போல் அதர்மமான முறையில் கொல்லப்படுகிறான்.

இவர்கள் அத்தனை பேர் மரணத்துக்கும் ஒரு வகையில் காரணமானவன் கண்னன்(ராமன்) தான்.

அவரவர் செய்த பலனுக்கு கூலியை பாரபட்சமின்றி அவரவர்க்கு கொடுத்தான்.

அப்பா,அம்மா என்றெல்லாம் அவன் பார்க்கவில்லை.

அவன் அது அனைத்தையும் கடந்தவன்.

தப்பு செய்த பக்தருக்கு தண்டனை கொடுத்தபோதும் அவர்களை அவன் கைவிட்டு விடவில்லை.செய்ததப்புக்கு தண்டனையும் கொடுத்து அவர்களை காக்கவும் அவன் தவறவில்லை.

அர்ச்சுனன் தப்பு செய்தான்.அதே சமயம் காட்டுக்கு போய்,மனைவி அவமானப்பட பார்த்து படாத துன்பம் எல்லாம் பட்டுவிட்டான்.

அவன் தப்புக்கு தண்டனை தந்த கண்ணன் அவனை இறுதியில் காக்கவும் தவறவில்லை.

மிக நல்ல பேற்றை அவனுக்கு தந்தான்.

சீதை விஷயத்தில் நடந்ததும் இதுதான்.

முன்னை விட புகழோடு தான் அவள் தீயிலிருந்து எழுந்தாள்.

தீக்குளித்து எழுந்த சீதைக்கு தசரதன் சொல்லுவான்.

"பொன்னைத் தீயிடைப் பெய்வது அப் பொன்னுடைத் தூய்மை-
தன்னைக் காட்டுதற்கு" என்பது மனக் கொளல் தகுதி;
உன்னைக் காட்டினன், "கற்பினுக்கு அரசி" என்று, "உலகில்,
பின்னைக் காட்டுவது அரியது" என்று எண்ணி, இப் பெரியோன்.

'பெண் பிறந்தவர், அருந்ததியே முதல் பெருமைப்
பண்பு இறந்தவர்க்கு அருங் கலம் ஆகிய பாவாய்!
மண் பிறந்தகம் உனக்கு; நீ வான் நின்றும் வந்தாய்;
எண் பிறந்த நின் குணங்களுக்கு இனி இழுக்கு இலையால்'.


பக்தருக்கு உயர்வு தர அவன் தவறுவதில்லை. அதற்காக தன்னை எந்த அளவுக்கு தாழ்த்திக்கொள்ளவும் அவன் தயங்குவதில்லை.அர்சுனனுக்கு எப்பேர்ப்பட்ட கவுரவத்தை தந்தான்?"பார்த்த சாரதி" என்று தன்னை அழைக்க வைத்து காலம் உள்ள காலம் வரை அர்ச்சுனன் பெயர் நிலைக்க அல்லவா வழி செய்தான்?

கண்ணப்ப நாயனாரிடம் கண்னை கேட்டதும்,பத்ராசல ராமதாசர் மீது திருட்டுப்பழி சுமத்தியதும்,சிறுத்தொண்டரிடம் பிள்ளைக்கறி கேட்டதும்,சீதையை தீக்குளிக்க வைத்ததும்.....

அந்த அலகிலா ஆண்டவனின் விளையாட்டுக்கள்.

இவை எல்லாம் அவர்கள் செய்த வினைக்கு அவன் கொடுக்கும் கூலி.அதே சமயம் இந்த அததனை இடங்களிலும் தன்னை தாழ்த்திக்கொண்டு பக்தருக்கு உயர்வை தரும் செயலை தான் அவன் செய்துள்ளான்.


மனிதன் என்று பார்த்தால் இது அத்தனையும் தவறுதான்.

மனிதன் பிள்ளைக்கறி கேட்டால் அது தப்பு.மனிதன் இன்னொரு மனிதனின் கண்னை கேட்டால் அது தப்பு.

கடவுள் நல்ல மனிதனாககவோ,நல்ல தந்தையாகவோ,நல்ல கணவனாகவோ இருக்க முடியாது.

நல்ல கடவுளாகத்தான் இருக்க முடியும்.

 அதனால் மீண்டும் இன்னொருமுறை என் தீர்ப்பை சொல்கிறேன்.

"ராமன் நல்ல மகனல்ல,நல்ல நண்பனல்ல,நல்ல கணவனல்ல.நல்ல சகோதரனுமல்ல.நல்ல மன்னனுமல்ல,ஈடு இணையற்ற வீரனுமல்ல"

ஆனால்

"அவன் நீதியும்,நேர்மையும்,கருணையும், காருண்யமும் நிறைந்த கடவுள்"

 
PROVIDER=MICROSOFT.JET.OLEDB.4.0;DATA SOURCE=G:\PleskVhosts\tamiloviam.com\httpdocs\unicode\db\TOcomments.mdb;Persist Security Info=False;
உங்கள் கருத்து  
(You may need to disable your pop-up blocking software in order to post a comment.)
Copyright © 2001 - 2008 Tamiloviam.com (subsidary of Oviam LLC)- Authors
Best viewed with IE 4.x and above, Netscape 7.2, Firefox 0.8 and above with resolutions 800 X 600 and above.
| Disclaimer |   | Privacy |